ஆர்கனான் சுலோகம்

101 முதல் 200 வரை
101. கொள்ளை நோய் ஒன்றால் தாக்கப்பட்டுத் தன்னிடம் சிகிச்சை பெறவரும் முதல் நோயின் குறிகளைக் கொண்டு அந்நோயின் முழு உருவத்தையும் தெரிந்துகொள்ள வைத்தியருக்கு முடியாமல் போவது சகஜம். பல நோயாளிகளை ஊன்றிக் கவனித்த பிறகுதான் நோயின் மொத்தக் குறிகளை அறிய முடியும் ஆயினும் மிகக் கூர்ந்து கவனிக்கும் வைத்தியர் ஒன்று அல்லது இரண்டு நோயாளிகளைப் பார்த்தவுடனே பல சமயங்களில் நோயின் உண்மையான தன்மையையும் முழு உருவையும் அறிந்து கொண்டு அதற்கேற்ற ஹோமியோபதி மருந்தைத் தேர்ந்தெடுக்கலாம். அவரால் முடியும்.

102. கொள்ளை நோயால் தாக்கப்படும் போது, பல நோயளிகளைப் பார்த்த பின்பு அனைவருக்கும் ஒரே விதமான குறிகள் தோன்றினால், அந்த அதிகப்படியான குறிகளை எடுத்து தொகுத்துப் பார்த்தால் அந்தக் குறிகளைப் பெற்ற மருந்து எதுவென்று தெரிந்துவிடும். இப்போது கொள்ளை நோயால் தாக்கப்பட்ட அனைவருக்கும் இந்த மருந்தை கொடுக்கலாம் இதுதான் தடுப்பு மருந்தாகும். (உதாரணம் பசி இல்லாமை தூக்கம் இல்லாமை முதலியவை) காணப்படும் விசேஷத் தன்மைகள் தெளிவாய்த் தெரிவதுடன் அதன் சிறப்புக் குறிகளும் முக்கிய குறிகளும் மேலும் விளக்கம் பெற்று நோயின் தனிப்பட்டகுறிகளாய் அமைகின்றன. குறிப்பிட்ட ஒரு சமயத்தில் கொள்ளை நோயொன்றினால் தாக்கப்படும் எல்லா நோயாளிகளும் ஒரே ஒரு இடத்திலிருந்துதான் நோயை அடைந்திருக்கின்றனர் என்பது நிச்சயம் . ஆதலால் அவர்கள் எல்லோரும் ஒரே நோயினால்தான் தாக்கப்பட்டிருக்கின்றனர். ஆயினும் இத்தகைய கொள்ளை நோயின் முழு உருவத்தையும் ஒரே ஒரு நோயாளியிடமிருந்து அறிய முடியாது. மாறுபட்ட உடல் அமைப்புள்ள பல நோயளிகளின் நோய்க்குறிகளைத் தொகுத்துத்தான் அறியமுடியும்.

103. அனேகமாகத் திடீரென்று தோன்றும் குணமுள்ள கொள்ளை நோய்களைப் போலவே விஷநோய்க் கூறுகளால், அவைகளிலும் முக்கியமாக சோரா எனப்படும் விஷ நோய்க் கூற்றினால், ஏற்படும் நீடிக்கும் வகை நோய்களை மிக நுனுக்கமாய் ஆராய்ந்து அவைகளின் குறிகளனைத்தையும் மிக விரிவான முறையில் கவனிக்க வேண்டும் ஏனெனில் கொள்ளை நோய்களில் காணப்படுவதைப் போலவே நீடிக்கும் வகை நோய்களிலும் ஒரு நோயாளியிடம் அந்நோய்களின் பல குறிகளில் ஒரு சிலவே காணப்படும். இரண்டாவது நோயாளியிடம் வேறு சில குறிகள் தென்படும். இவ்விதம் ஒவ்வொரு நோயாளியிடமும் காணப்படும் ஒவ்வொரு விதமான நோய்க் குறிகள் நோயின் மொத்தக் குறிகளில் ஒரு பகுதியே. ஆதலால் எல்லாப் பகுதிகளையயும் ஒன்று சேர்த்துப்பார்த்தால்தான் விஷநோய்க் கூற்றினால் உண்டாக்கப்படும் நோய்களின் முழு உருவத்தையும் நாம் உணர முடியும் . முழு உருவத்தை உணராமல் விஷ நோய்க் கூறுகளை நீக்க கூடிய ஹோமியோபதி மருந்தைக்கண்டு பிடிக்க முடியாது. விஷநோய்க் கூறுகளை நீக்கும் மருந்துகளால்தான் நீடிக்கும் வகை நோய்களைக் குணம் செய்யவும் முடியும்.

104. எவ்வகையைச் சேர்ந்ததாய் இருந்தாலும், ஒரு நோயின் மொத்தக் குறிகளை அதாவது அதன் உருவத்தை, ஒழுங்காய் வரைந்துவிட்டோமானால், மிக கஷ்டமான ஒரு காரியத்தை முடித்தவர்களாவோம். சிகிச்சை செய்யும் காலத்தில் வைத்தியருக்குத் தேவையான சமயங்களிலெல்லாம் மேற்படி நோயின் உருவம் உதவி செய்யும். மொத்தக் குறிகளிலுள்ள ஒவ்வொரு பிரிவையும் தனித் தனியே ஆராயலாம் சிறப்புக் குறிகளைத் தேடிப் பிடித்து முழு நோயையும் நீக்க வல்ல மருந்துகளைத் தேர்ந்தெடுக்கலாம். இரண்டாவது முறையாக நோயாளியைச் சோதனை செய்யும்போது முதல் சோதனையில் காணப்படாத புதுக்குறிகள் இருந்தால் அக்குறிகளைச் சேர்த்து, முதல் சோதனையில் காணப்பட்டு அப்பொழுது காணப்படாத குறிகளை அடித்துவிட்டால், மருந்துகளால் ஏற்பட்ட விளைவுகளையும், நோயாளியின் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் வைத்தியர் எளிதிலே கண்டு கொள்ளலாம்.
*இரண்டாவது வினாவுக்கு விடை105-145:-
(வினாவின் விவரங்களை 71-சுலோகத்திற்கு கிழே பார்க்கவும்.)

105. உண்மையான வைத்தியரொருவர் நோயை நீக்கத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைத் தீர்மானிப்பது எப்படி என்ற முதல் கேள்விக்கு மேலே விடை அளித்தாகிவிட்டது. அடுத்தபடி இயற்கையாக ஏற்படும் நோய்களை நீக்கத்தக்க பொருள்கள் மருந்துகளுக்குள்ள நோயுண்டாக்கும் சக்தி ஆகியவைகளைப்பற்றி தெரிந்துகொள்வது எப்படி என்ற இரண்டாம் கேள்விக்கு விடையளிக்க வேண்டும். இவ்விடை தெரிந்தால்தான் அதாவது ஒவ்வொரு மருந்தும் (நோயற்ற உடலில்) தோற்றுவிக்கும் (செயற்கை நோய்க்) குறிகளின் பட்டியலைக் கொண்டுதான் அவைகளில் எந்த மருந்து சிகிச்சைக்கு வந்துள்ள (இயற்கை) நோயின் மொத்தக் குறிகளுடன் ஏறக்குறைய ஒற்றுமையுள்ள குறிகளை உண்டாக்கியிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து அம் மருந்தை கொடுத்து குணம் செய்ய முடியும்.

106. பல மருந்துகளைப் பற்றி அவை ஒவ்வொன்றும் நோயற்ற உடலில் ஏற்படுத்தும் மாற்றங்களும் தோற்றுவிக்கும் (செயற்கை) நோய்க்குறிகளும் என்னென்னவென்று முதலில் விவரமாய்த் தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் இயற்கை நோய்களுக்கு ஏற்றதாயுள்ள மருந்தைத்தேடி எடுக்க முடியும். அதற்கு நாம் முன்னமே மெட்டிரியா மெடிகாவை படித்திருக்கவேண்டும்.

107. ஒவ்வாரு மருந்துக்கும் என்னென்ன நோய்க்குறிகளை உண்டாக்கும் வல்லமை இருக்கிறது என்று நிர்ணயிக்க மருந்துகளை நோய் உள்ளவர்களுக்குக் கொடுத்துச் சோதிக்கலாம் ஆனால், அவ்வாறு செய்தால் மருந்தினால் உடலில் தோன்றக் கூடிய நோய்க் குறிகள் இயற்கை நோயின் குறிகளுடன் கலந்து குழப்பத்தை உண்டாக்கிவிடும்.

108. ஆதலால் ஆரோக்கியமான மனித உடலிலே மருந்துகளால் தோன்றுவிக்கப்படும் நோய்குறிகள் என்னென்ன என்பதைத் தவறு இல்லாமல் நிர்ணயிக்க வேறு வழி இல்லை. ஒவ்வொரு மருந்தும் நோயற்ற ஒருவரின் உடலிலும், மனதிலும் என்னென்ன மாற்றங்களையும் குறிகளையும் அதாவது நோய்க்குறிகளை உண்டாக்கும் வல்லமை பெற்றிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஒவ்வொரு மருந்தையும் தனித்தனியே, மிதமான அளவுகளில் நோயற்ற ஒருவருக்குக் கொடுத்துச் சோதிப்பதைத் தவிர வேறு சிறந்த வழி ஒன்றுமே இல்லை. செயற்கை நோய்க் குறிகளை (நோயற்ற உடலில்) உண்டாக்கும் இயல்பைப் பெற்றிருப்பதாலேயே ஒவ்வொரு மருந்தும் இயற்கை நோயை நீக்குகிறது.

109. இந்த வழியை முதன் முதலில் கண்டுபிடித்தது நானே. ஹோமியோபதி மருந்துகளால்தான் மனித வர்க்கத்தின் நோய்களை நீக்க முடியும், அவை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமையும் என்ற பேருண்மையில் ஆழ்ந்த, அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருந்ததாலேயே விடா முயற்சியுடன் இவ்வழியில் தொடர்ந்து சென்றேன்.

குறிப்பு:-

ஓரறிவு உயிரினம் முதல் ஐந்தாவது அறிவு உயிரினம் வரை உணவிற்காகவும், உறைவிடத்திற்காகவும், உடலுறவிற்காகவும் அது எடுக்கின்ற முயற்சியில் தடை ஏற்பட்டால், ஆறு குணங்கள் தோன்றுகிறது. அதனால் எதிர் தரப்பு உயிரினம் பாதிக்கப்பட்டால், அதுவே சாபமாக பதிந்து விடுகிறது. நுட்பமான உடலமைப்பையும், மன அமைப்பையும் பெற்ற மனிதன் அதே செயல்களை, வலிமையாகவும், நுட்பமாகவும் செய்வதால் பாதிக்கப்பட்டவர்களுடைய நிலையிலிருந்து எழும் நச்சு அலையே சாபம் எனப்படும்.

உதாரணம்:-

செல்போனில் டையல் செய்யும் போது, அது டவரில் போய் பதிவாகி குறிப்பிட்ட நபருக்கு போய் சேர்வதை போல, கருமையத்தில் மனிதனின் எல்லா பாவமும் பதிவாகி இருக்கிறது. அந்த பாவம் மீண்டும் வராமல் தடுத்து கொள்ளவும். ஏற்கனவே உள்ள பாவமூட்டைகளை கரைத்து கொண்டே வரவும், தவம் தற்சோதனை, காயகல்பம் போன்ற பயிற்சிகளை தருகிறார். இதே போல வள்ளலார் அவர்கள் கூறும் போது, ஆறரிவு பெற்ற மனிதனுக்கு அன்பு செய்யும் போதும், மற்ற உயிரினங்களின் மீது இரக்கம் காட்டும் போதும், சன்மார்க்கத்தில் மனம் இடைவிடாமல் மனதை வைத்து உணவுகளை தயாரித்து பங்கிட்டு உண்பதால் மனம் ஒரே நிலையில் இருந்து, மனோசக்தி அதிலிருந்து உற்பத்தி ஆகி அந்த பாவங்களை அழித்து கொண்டோ கரைத்துக் கொண்டோ வரும் என்கிறார். {மனோசக்தி என்று இவர் கூறுவது அருட்பெருஞ்சோதி என்கிறார். இதே மனோசக்தியை தான் திருமுலர் என்பவர் பசு என்றும், ஆதிசங்கரர் அத்வைதம் என்றும், ஒளவையார் அவர்கள் பரமாய சக்தி என்றும், ஹானிமேன் அவர்கள் ஏஐகூடு குடீசுஊநு என்றும், வியாசர் அவர்கள் தனது படைப்பான மகாபாரதத்தில் பஞ்சபூதங்களை காட்ட பஞ்சபாண்டவர்கள் என்றும், பஞ்சபூதத்திலிருந்து எழுகின்ற ஓர் ஆற்றலை (உயிர் அதன் படர்கை நிலையே மனம); ஐந்து விதமான மனோ நிலைகளை காட்டுகிறார்.

அதனை கட்டுபடுத்துகின்ற பேராற்றலாக திரௌபதி என்ற கதாபாத்திரத்தை படைக்கிறார். ஆக திரௌபதி வான்காந்தமாகவும், ஜீவகாந்தமாக பஞ்சபாண்டவர்களின் மனதையும், இப்படி கீழிருந்து மேலே கொண்டு சென்று உடல், உயிர், உயிரின் படர்கை (மனம்) அதையும் கட்டுபடுத்துகின்ற ஒரு பெரிய சக்தி தான் பேராதார சக்தி. (மகரிஷி அவர்கள் கூறும் வான்காந்த சக்தியும், வள்ளலார் கூறும் அருளை தந்துக்கொண்டேயிருக்கும் அருட்பெருஞ்சோதி என்பதும் இந்த பேராதார சக்தியைதான்.) இந்த வான்காந்தத்தை தான் திரௌபதி என்றும்) (அ) மகாவிமூ;Z என்றும் கூறுகிறார். இந்த செய்தியை வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கி கூறினார். ஏசு அவர்கள் பரலோகத்தில் இருக்கும் என் பரமபிதாவே (கர்த்தர்) என்றும், நபிநாயகம் அவர்கள் (அல்லா) எங்கும் நிறைந்திருப்பவன் என்று கூறுகிறார். சைவ சித்தாந்தம் கூறுவதாவது, முழுப்பொருளே முதல் பொருளே அமைதியே சிவம். என்று கூறுவதும் இந்த ஆற்றலை தான். வேதாத்திரி மகரிஷி அவர்கள் இதையே தான் வான்காந்தம் என்றும் கூறுகிறார். இப்படி தான் பல ஞானிகள் கூறுகின்ற ஒரு பெரிய பொருளைதான் அவரவர் நிலைக்கேற்ப பெயரிட்டு கூறுகிறார்கள்.} ஆகவே ஜீவகாருண்யமே, பசி, பிணி நிக்குதலே அமைதி (அ) மோட்சம் அடைய சிறந்த வழி என்று வள்ளலார் கூறுகிறார்.

110. தவறுதலாக அல்லது தன்னுயிரையோ, பிற உயிரையோ மாய்க்கும் பொருட்டு அல்லது வேறு ஏதோ ஒரு சந்தர்ப்பம் காரணமாய் நோயுற்ற உடலுள்ளவர்கள் மருந்துப் பொருள்களை அதிக அளவில் உட்கொண்டபோது உடலில் காணப்பட்ட விளைவுகளை எனக்கு முன்னிருந்த ஆசிரியர்கள் பலர் கவனித்துக் குறித்து வைத்திருக்கின்றனர். என் உடலிலும் நோயற்ற வேறு சிலர் உடலிலும் அம் மருந்துகளைச் செலுத்திச்சோதனை செய்தபோது தோன்றியகுறிகள் அவ்விளைவுகளுடன் பெரும்பாலும் ஒற்றுமையாய் இருந்ததை நான் கவனித்தேன். விஷமிடப்பட்ட வரலாறுகளைப் பற்றியும் இத்தகைய பலம் பொருந்திய மருந்துகளின் கெடுதலான விளைவுகளைப் பற்றியும் அவர்கள் விரிவாய் எழுதியதற்கு முக்கியக்காரணம் அம்மருந்துகளை உபயோகிப்பது ஆபத்து என்று மற்றவர்களை எச்சரிக்கவே ஆகும். ஆயினும் இவ்விஷ மருந்துகளை உட்கொண்டு தங்களிடம் சிகிச்சை பெற வருவோர் தெய்வாதீனமாய்ப் பிழைத்துவிட்டால் பார்த்தீர்களா என் சாமர்த்தியத்தை? எவ்வளவு கொடுமையான விஷத்திலிருந்து காப்பற்றி விட்டேன் என்று தற்பெருமை பேசிக்கொள்ளவும் அவர்கள் இறந்து விட்டால் நான் என்ன செய்வேன்? விஷம் அவ்வளவு கொடுமையானது என்று கூறி விஷத்தின் மீது பழியைச் சுமத்திவிட்டு தான் தப்பித்துக்கொள்ளவும், இவ்விவரங்கள் ஓரளவுக்கு உபயோகப்படுத்தப்பட்டன. மருந்துப் பொருள்களிலுள்ள விஷத் தன்மைக்கு அத்தாட்சிகள் என்று சர்வ சாதாரணமாய் அவர்கள் குறித்து வைத்துள்ள விவரங்கள் கீழுள்ள மாபெரும் உண்மைகளை வெளியிடுகின்றன என்பதை அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.


1. இயற்கை நோய்களில் ஏற்படும் ஒற்றுமையான குறிகளை நீக்கும் வல்லமை அம் மருந்துகளுக்கு இருக்கிறது.
2. இம் மருந்துகளுக்குள்ள நோய்களை உண்டாக்கும் சக்திகள் ஹோமியோபதி முறைப்படி நோய்களை நீக்க அவைகளால் முடியும் என்பதற்கு அடையாளம்.
3. நோயற்ற உடலில் மருந்துகள் ஏற்படுத்தும் மாற்றங்ளிலிருந்துதான் அவைகளின் நோய் தீர்க்கும் வல்லமையை அறிய முடியும் வேறு வழி கிடையாது. நோய்களைக் குணம் செய்ய உதவும் மருந்துகளின் சக்தியை சாமார்த்தியமாய்ப் கூறப்படும் கற்பனைகளின் மூலமோ மருந்துகளின் வாசனை, சுவை, தோற்றம், நிறம் ஆகியவைகளைக் கொண்டோ, ரசாயன முறைப்படி ஆராய்ச்சிகள் செய்தோ அல்லது பல மருந்துகளைக் கலந்து கொடுப்பதாலோ அறிய முடியாது.

111. மருந்துகளால் ஏற்படுத்தப்படும் உண்மையான விளைவுகளைப்பற்றி நான் கவனித்தறிந்த விவரங்கள் எனக்கு முன் இருந்தவர்கள் எழுதி வைத்துள்ள விவரங்களுடன் ஒற்றுமையாய் இருக்கின்றன. நோயற்ற மனிதன் உடலில் நிலையான, அழிவற்ற இயற்கைச் சட்டங்களுக்கு உட்பட்டுத் தான் உண்டாக்கும் நோய்க்குறிகளை மருந்துகள் நீக்குகின்றன என்பதும் அவ்வியற்கைச் சட்டங்களின் துணை கொண்டு ஒவ்வொரு மருந்தும் அதன் தன்மைக்குத்தக்கபடி உண்மையான நோய்க் குறிகளை உண்டாக்குகின்றது என்பதும் இப்பொழுது எளிதிலே விளங்கும்.

112. மிக அதிகமான அளவுகளில் மருந்துகளை உட்கொண்டதால் ஏற்பட்ட கெடுதாலான விளைவுகளைப்பற்றி முற்காலத்திய வைத்தியர்கள் எழுதிவைத்துள்ள விவரங்கலிலிருந்து ஆரம்பக் காலத்தில் தோன்றிய குறிகளுக்கு நேர் மாறான குறிகள் முடிவுக்காலத்தில் தோன்றின என்பது தெரிகிறது. *முதல் வேலைக்கு?அதாவது மருந்துகள் உயிர்ப்புச் சக்தியைத் தாக்கும் முதல் வேலைக்கு நேர் எதிராக உள்ள இக்குறிகள் உடலிலுள்ள உயிர்ப்புச் சக்தியின் எதிர்த்தாக்குதலினால் அதாவது அதன் இரண்டாம் வேலையால் ஏற்பட்டவை. முதல்வேலை-(Primary Action) இரண்டாம் வேலை-(Secondary Action) நோயற்ற உடலில் மருந்துகளைக் குறைந்த உளவில் கொடுத்துச் சோதனை செய்யும்போது இரண்டாம் வேலைக் குறிகள் அனேகமாய் ஏற்படுவதில்லை. மருந்துகளின் அளவை மேலும் சிறிது குறைத்துச் சோதனை நடத்தினால் இரண்டாம் வேலைக் குறிகள் என்ற பேச்சுக்கே இடமிருப்பதில்லை. ஹோமியோபதி முறைப்படி நோய்களை நீக்குவதற்காக மருந்துகளை உபயோகிக்கும் போது உடலை நோயற்ற நிலைமைக்கும் மீட்டுக் கொண்டு வர எவ்வளவு தேவையோ அந்த அளவுக்குத்தான் உயிருள்ள உடல் மருந்தை எதிர்த்து வேலை செய்கிறது.

113. மயக்கமூட்டும் மருந்துகள் மட்டும் மேலுள்ளதற்கு விதி விலக்கு. நோயற்ற உடலில் அம் மருந்துகளை மிதமான அளவுகளில் கொடுத்துச் சோதனை செய்தால் கூட முதல் வேலையில் அவை சில சமயஙகளில் உடலின் உணர்ச்சிகளைப் போக்கி விடுகின்றன. அதனால் அவைகளின் இரண்டாம் வேலையில் அவை உடல் உணர்ச்சிகளை அதிகரிக்கின்றன.

114. மயக்கமூட்டும் மருந்துகளைத் தவிர வேறு எந்த மருந்தும் நோயற்ற உடலில், மிதமான அளவில் கொடுக்கப்பட்ட போது, அதன் முதல் வேலையைத்தவிர, அதாவது ஆரோக்கியத்தைக்கெடுத்துப் பல நாட்களுக்கோ சில நாட்களுக்கோ நீடிக்கும் நோயொன்றை ஏற்படுத்துவதற்கான நோய்க் குறிகளைத் தவிர வேறு எதையும் உண்டாக்கவில்லை.

115. சில மருந்துகளால் அவைகளால் முதலிலோ பிறகோ தோற்றுவிக்கப்படும் நோய்குறிகளுக்கு ஓரளவு மாறான அல்லது முற்றிலும் எதிரான வேறு பல நோய்க் குறிகள் தோன்றுகின்றன. அவைகளை மருந்தின் இரண்டாம் வேலை என்றோ அல்லது உயிர்ப்புச் சக்தியின் எதிர்ப்பு என்றோ நினைக்கக் கூடாது. மருந்துகளின் முதல் வேலையில் அவை ஒரு பகுதியே ஆதலால் அக் குறிகளை மருந்தின்*மாற்று வேலை எனப் பெயரிட்டு அழைக்கிறோம்.

116. மருந்துகளின் குறிகளில் சில எல்லா மனிதர்களிடமும் தோன்றுகின்றன. சில மிக அபூர்வமாகவோ அல்லது ஒரு சிலரிடம் மட்டுமோ தோன்றும். மற்றும் சில ஆரோக்கிய நிலையிலுள்ள எவருக்குமே தோன்றுவதில்லை.

117. பெரும்பாலான மக்களுக்கு எவ்வித தீங்கையும் உண்டாக்காத சிற்சில பொருள்கள் ஒரு சிலருக்குக் கூடுதலாகவோ, குறைவாகவோ நோயை உண்டாக்குகின்றன. இதற்குக் காரணம் அவர்களுடைய மாறுபட்ட உடல்வாகு என்று சொல்லப்படுகிறது. உடல்வாகு காரணமாய்த்தான் அப்பொருள்கள் மற்றுமுள்ள பலரையும் தாக்கவில்லை என்று நினைப்பது சரியல்ல ஏனெனில் நோயற்ற உடலில் நோய்க் குறிகளை ஏற்படுத்த இரண்டு விஷயங்கள் தேவை ஒன்று நோயை உண்டாக்கும் பொருள்களுக்கு இயல்பாய் அமைந்துள்ள சக்தி மற்றொன்று நோயுண்டாக்கும் பொருளால் தாக்கப்படும் தன்மை உயிப்ப்புச் சக்திக்கு இருத்தல் (* மாற்றுவேலை (Atlernating Action) ஆகவே ஒரு நோய்ப் பொருளால் ஒரு சிலர் மட்டும் நோய் வருவதற்கு அவர்களுடைய உடல்வாகு ஒன்றே காரணம் என்று சொல்ல இடமில்லை. அந்நோய்ப் பொருள்களின் சக்தி, உயிர்ப்புச் சக்தியின் நோயை ஏற்கும் தன்மை ஆகிய இவ்விரண்டும் அதில் பங்கு கொள்கின்றன. நோய்ப்பொருள்கள் எல்லோர் உடலையும் தவறாமல் தாக்கத்தான் செய்கின்றன. ஒரு சிலர் உடலில் மட்டும் நோய்ப் பொருளை ஏற்கும் தன்மை இருப்பதால் அவர்களுக்கு நோய் தோன்றுகின்றன. ஒரு நோய்ப் பொருளின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்று கருதப்படும் நபர்களிடம் தென்படும் நோய்க் குறிகளைக் கவனித்து அக்குறிகளுடன் நெருங்கிய ஒற்றுமை குறியுடைய அந்நோய் பொருளை ஹோமியோபதி மருந்தாய் உபயோகித்தால் நோயுற்றவர்கள் எல்லோருக்கும் குணம் ஏற்படுகிறது. ஆகவே நோய்ப் பொருள்கள் எல்லோர் உடலிலும் தம் சக்தியைக் காட்டத்தான் செய்கின்றன என்பது இப்பொழுது விளங்கும்.

118. ஒவ்வொரு மருந்தும் மனித உடலைத்தாக்கி அதற்கே உரியதான நோய்க் குறிகளைத்தோற்றுவிக்கிறது. அந் நோய்க் குறிகள் வேறு மருந்துகளால் தோற்றுவிகப்கப்படும் நோய்க்குறிகளும் முற்றிலும் ஒற்றுமையுள்ளவைகளாய் இருப்பது கிடையாது.

119. தாவரங்களில் பல இனங்கள் இருக்கின்றன. புறத்தோற்றம், உயிர் வாழும் விதம், வளர்ச்சி, சுவை, வாசனை முதலிய விஷயங்களில் ஒவ்வொரு இனத்திற்கும் வேற்றுமை இருக்கிறது. உலகில் கிடைக்கும் கனிமப் பொருள்கள் உப்புப் பொருள்கள் ஆகியவை ஒன்றுக்கொன்று பல விதங்களில் மாறுபாடாய் இருக்கின்றன. இதனால்தான் குழப்பம் இல்லாமல் அவை ஒவ்வொன்றையும் நாம் தனித்தனியாய்ப் பாகுபாடுசெய்து அறிந்து கொள்கிறோம். இதே போல அவை உண்டாக்கும் நோய்க் குறிகளிலும் வித்தியாசம் இருக்கிறது. எப்பொழுது அவை உண்டாக்கும் நோய்க் குறிகளில் வித்தியாசம் இருக்கிறதோ அப்போது அவை நீக்கும் நோய்க் குறிகளிலும் வித்தியாசம்; இருக்கத்தான் செய்யும் என்று சொல்லத் தேவையில்லை. ஒவ்வொரு பொருளும் மனிதர்களின் ஆரோக்கியத்தைக் குழைத்து, ஒவ்வொரு விதமான, வேற்றுமைகளை உடைய நோய்க் குறிகளை உண்டாக்கும்.

120. மனிதனின் உயிரும் சாவும், நோயும் ஆரோக்கியமும் மருந்துகளில் அடங்கி இருக்கின்றன. ஆதலால் ஒவ்வொரு மருந்துக்கும் உள்ள தனிப்பட்ட குணங்களை கவனமாய் அறிந்து கொள்ளவேண்டும். மருந்துகளைப்பற்றிய உண்மையான அறிவைப் பெறவும் நோய்களை நீக்க அவைகளை உபயோகிக்கும்போது தவறு நேராமல் இருக்கவும் நோயற்ற உடலிலே அவைகளைக் கொடுத்துச் சோதனை செய்து அவைகளின் வலிமையையும், உண்மை விளைவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் தவறு இல்லாமல் சரியான மருந்துகளைத் தேர்ந்தெடுத்து கொடுத்தால்தான் மனிதனின் மனதிலும், உடலிலும் ஏற்படும் நோய்களை விரைவிலும் நிரந்தரமாகவும் நீக்க முடியும்.

121. நோயற்ற உடலிலே மருந்துகளால் ஏற்படுத்தப்படும் விளைவுகள் யாவை என்று கண்டுபிடிக்கச் சோதனை செய்யும்போது அம்மருந்துகளின் தன்மையை அனுசரித்து அவைகளின் அளவுகளைக் குறைக்கவும் கூட்டவும் வேண்டும் இவ்விஷயத்தை மறக்கக் கூடாது. அதாவது கொடூரதன்மையுள்ள மருந்துகள் குறைந்து அளவுகளில் கொடுக்கப்பட்டாலும் உறுதியான உடல் கட்டு உள்ளவர்களையும் தாக்கி நோய்க் குறிகளை உண்டாக்குகிறது. அதிகமான கொடூரத்தன்மை இல்லா மருந்துகளை அதிக அளவுகளில் கொடுத்துச் சோதனை செய்யலாம் மிகப் பலவீனமான தன்மையுள்ள மருந்துகளை சோதனை செய்வதற்காக உட்கொள்ளும் மனிதர்கள் நோய் இல்லாமல் இருப்பதுடன் நல்ல உடலையும் எளிதிலே உணர்ச்சிகளை அறியும் தன்மை பெற்றிருக்கவேண்டும்.

122. இம் மருந்துச் சோதனைகளில் இரண்டு மாபெரும் விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. ஒன்று வைத்தியக் கலையின் எல்லாப் பிரிவுகளும் மாசுமரு அற்றதாய் இருக்கவேண்டும் . இரண்டாவது மனித சமூகத்தின் பிற்காலச் சந்ததிகள் எல்லோருடைய நலன்களும் செவ்வனே பாதுகாக்கப்படவேண்டும். ஆதலால் உபயோகிக்கும் மருந்துகள் தமக்கும் நன்றாய்த் தெரிந்தவைகளாய் இருக்க வேண்டும். அவைகளின் சுத்தத் தன்மையில் எவ்விதச் சந்தேகத்துக்கும் இடம் இருக்கக் கூடாது.

123. இம் மருந்துகள் ஒவ்வொன்றும் முற்றிலும் தூய்மையான உருவில் உட்கொள்ள வேண்டும் அதாவது அருகில் கிடைக்கும் பச்சிலை மூலிகைகளை நசுக்கிச் சாறு பிழிந்து உட்கொள்ள வேண்டும். சாறு கெட்டுப் போகாமல் இருக்க அதனுடன் சிறதளவு ஆல்கஹால் கலக்கலாம். அயல் நாடுகளிலேயே கிடைக்கக்கூடிய பச்சிலை மூலிகைளைத் தூள் செய்து உட்கொள்ள வேண்டும். அல்லது அவை பசுமையாய் இருந்த சமயத்தில் சாறு பிழிந்து உடனே ஆல்கஹாலுடனும் பிறகு குறிப்பிட்ட அளவில் தண்ணீருடனும் கலந்து வைக்கப்பட்ட திரவத்தை உட்கொள்ளலாம். உப்புக்களையும் பிசின்களையும் தேவையான நேரத்தில்தான் தண்ணீரில் கரைத்து உட்கொள்ளலாம். (* ஆல்கஹால்(Alcohol)என்பது சுத்தம் செய்யப்பட்ட சாராயம்.) காய்ந்து போய் விட்ட பச்சிலை மூலிகைகளில் மருந்துச்துச்சக்தி குறைவாகத்தான் இருக்கும். ஆதால் பசுமையாய்க் கிடைக்காத மூலிகைகளைத் துண்டு துண்டாய் வெட்டிக் சுடு தண்னீரை ஊற்றி வடிக்கட்டித் தயாராகும் கஷாயத்தைச் சூடாய் இருக்கும்போதே உபயோகிக்க வேண்டும. தாவரங்களைக் கொண்டு தயாரிக்கபப்பட்டவை மிக விரைவில் புளித்துக் கெட்டுப்போய் விடுகின்றன.

124. இச் சோதனைகளில் ஒவ்வொரு மருந்தையும் தனித்தனியே உபயோகிக்க வேண்டும். வேற்றுப்பொருள் எதனுடனும் கலக்கக் கூடாது மருந்தை உட்கொண்ட அன்றும் அடுத்துச் சில நாட்கள் வரையிலும் அல்லது மருந்தின் விளைவுகளை ஆராயவேண்டுமென்று நாம் விரும்பும் நாட்களிலும் மருந்துக் கலப்புள்ள எவ்பொருளையும் உட்கொள்ளக்கூடாது.

125. சோதனைக்காலம் முழுவதும் சோதனையாளர் உணவு விமூயத்தில் கண்டிப்பான ஒழுங்கை அனுசரிக்க வேண்டும். நாவுக்குச் சுவைதரும் பொருள்களைக் கூடுமான வரை விலக்க வேண்டும். உடலுக்கு ஊட்டம் தரும் எளிய உணவை மட்டும் உட்கொள்ளலாம். பச்சைக் காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், குழம்பு, ரசம் ஆகியவைகளும் விலக்கப்படவேண்டும். காப்பி, டீ, ஒயின் முதலிய மதுபான வகைகள் ஆகிய பொருள்களையும் அறவே தள்ள வேண்டும்.

126. சோதனையாளர் சோதனைக்காலம் முழுவதும் உள்ளத்தாலோ உடலாலோ அளவு மீறி உழைக்கக் கூடாது. புத்திச் சிதறவிடக் கூடாது. உணர்ச்சிவயப்படக்கூடாது. கவனத்தைக் கவரக்கூடிய எந்த அவசர வேலையும் அவருக்கு இருக்கக் கூடாது. கவனமாய்த் தன்னை ஆராய்வதிலேயே நேரத்தைச் செலவிடவேண்டும். அவ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் போது அதைக் கலைக்கக் கூடாது. அவருடைய உடலுக்கு இயற்கையாய் அமைந்துள்ள ஆரோக்கிய நிலைமையுடன் அவர் இருக்கவேண்டும். தன்னுடலில் மருந்தினால் உண்டாகும் உணர்ச்சிகளைச் சரியான முறையில் சொல்லவும். விளக்கவும் போதுமான அறிவுள்ளவராய் இருக்கவேண்டும்.

127. ஆண், பெண், ஆகிய இரு பாலரிடமும் மருந்துகள் சோதிக்கப்பட வேண்டும் ஆண் பெண் -உறவு விஷயமாக மருந்துகளால் ஏற்படுத்தப்படும் இயற்கைக்கு மாறான மாறுதல்கள் அப்பொழுதுதான் வெளிப்படும்.

128. மருந்துகளின் விளைவுகளைச் சோதித்தறிவதற்காக அவைகளை அப்படியே உபயோகம் செய்யக்கூடாது. வீரியம் செய்துதான் உபயோகிக்க வேண்டும் அப்போதுதான் அவைகளினுள்ளே மறைந்து இருக்கும் சக்திகள் வெளியாகும். அவைகளை ஒழுங்கான முறையில் நன்றாகப்பொடி செய்தும் பலமாய்க் குலுக்கியும் வீரியப்படுத்தி உபயோகித்தால் அவைகளிலுள்ள மறைந்திருந்த சக்திகள் நம்பமுடியாத அளவுக்கு வெளிப்படுகின்றன. நவீன ஆராய்ச்சிகள் இவ் விஷயத்தை வெளியிடுகின்றன. சக்தியற்றவை என்று கருதப்படும் பொருள்களாய் இருந்தாலும் அவைகளிலுள்ள மருந்துச் சக்தியை ஆராய அம்முறை மிகச்சிறந்தது. என்பதை நாம் இப்போது அறிகிறோம். அதற்காக நாம் கையாளும் வழி என்னவென்றால் சோதளையாளர் வெறும் வயிறாக இருக்கும் போது ஒவ்வொரு நாளும் மருந்தின் முப்பதாவது வீரியத்திலுள்ள நான்கு அல்லது ஐந்து மிகச் சிறிய மாத்திரைகளைச் சிறிது தண்ணீருடன் கொடுக்கிறோம். இதைப்போலவே அவர் பல நாட்களுக்கு மருந்தைத் தொடர்ச்சியாய் உட்கொண்டு வரவேண்டும்.

129. மேலுள்ள அளவுப்படி மருந்தை உட்கொண்ட பிறகு அதானல் தோன்றும் விளைவுகள் (நோய்குறிகள்) தெளிவாய் இல்லாவிட்டால் ஒவ்வொரு நாளும் மேலும் சில மாத்திரைகளைக் கூடதலாய் உட்கொண்டு வரலாம். நோய்க்குறிகள் தெளிவாகவும், பலமாகவும், நோயற்ற நிலைமையில் குறிப்பிடத்தக்க அளவுக்கும் மாறுதலும் ஏற்படும் வரை மருந்தை உட்கொண்டு வரவேண்டும். மருந்துகள் எல்லா உடம்பிலும் ஒரே விதமாய் வேலை வெய்வதில்லை. ஏராளமான வித்தியாசம் இருக்கிறது. பலவீனமாயுள்ள ஒருவரின் உடலில் சக்தி வாய்ந்ததென்று கருதப்படும் ஒரு மருந்தை மிதமான அளவில் கொடுத்தால் நோய்க்குறிகள் உண்டாவதில்லை. ஆனால் அதே மனிதர் சக்திக்கு குறைவாயுள்ள மற்றோர் மருந்தினால் பலமாய்த் தாக்கப்படுகிறார். இது மட்டுமல்ல திடகாத்திரமான உடலுள்ளவர்களில் சிலர் சக்திக் குறைவான மருந்துகளால் கடுமையாய்த் தாக்கப்பட்டு சக்திவாய்ந்த மருந்துகளால் லேசாகப் பாதிக்ப்படுகின்றனர். இவ்விஷயத்தை நாம் முன் கூட்டியே தெரிந்து கொள்ள முடியாது. ஆதலால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆரம்பத்தில் மருந்தைக் குறைவான அளவில் கொடுத்துப்பிறகு தேவையானால் நாளுக்கு நாள் அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.

130. முதல் வேளையில் கொடுக்கப்படும் மருந்து தேவையான அளவிற்குப் பலம் வாய்ந்ததாய் இருந்தால் ஒரு நன்மை இருக்கிறது. அதாவது நோய்களின் வரிசையின் ஒழுங்கை சோதனையாளர்களால் அறியமுடிகிறது. ஆகவே ஒவ்வொரு குறியும் எந்தநேரத்தில் தோன்றியதென்பதைச் சரியாகக் குறித்துக் கொள்ள முடியும். மருந்தின் தன்மையையும் அதன் முதல் வேலை, இரண்டாம் வேலை, மாற்று வேலை ஆகியவைகளின் ஒழுங்கையும் தெளிவாய்த் தெரிந்துகொள்ள இக் குறிப்புகள் மிகவும் உதவியாய் இருக்கின்றன். சோதளையாளருக்கு உணர்ச்சிகளை நுட்பமாய் அறியும் தன்மையும் கவனிக்கும் திறமையும் இருந்தால் மிகவும் குறைந்த அளவில் உள்ள மருந்தே பல சமயங்களில் போதுமானதாக இருக்கும். ஒரு மருந்து வேலை செய்யும் கால அளவைப்பல முறை சோதனை செய்து ஒப்பிட்டுப் பார்த்தால்தான் கண்டுபிடிக்க முடியும்.

131. ஒரே மருந்தை ஒருவருக்குத் தொடர்ச்சியாய்ப் பல நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறிது அதிகரித்த அளவில் கொடுத்து வந்தால் அம் மருந்தினால் உண்டாகக் கூடிய நோய்க்குறிகள் அனைத்தையும் பொதுப்படையாய்த் தெரிந்து கொள்ள முடியாது. முன்னதாகக் கொடுக்கப்படும் மருந்து அதற்கு முன்னதாகக் கொடுக்கப்பட்ட மருந்தினால் தோன்றிய நோய்க் குறிகளில் சிலவற்றை நீக்கும் அல்லது மாற்றும் இவ்விதம் நீக்கப்படும் அல்லது மாற்றப்படும் குறிகளைத் தனியாய்க் குறித்துக்கொள்ளவேண்டும். மறு முறை நடத்தப்படும் சுத்தமான சோதனையின் மூலம் அக்குறிகள் உடலின் எதிர்ப்புக் காரணமாய்த் தோன்றியதா அல்லது மாற்று வேலையினால் தோன்றியதா என்பதைத்தெரிந்து கொள்ளும் வரை அவைகளைச் சந்தேகமுள்ளவைகளாகவே கருதவேண்டும்.

132. நோய்ககுறிகள் தோன்றும் வரிசையின் ஒழுங்கையோ அல்லது மருந்து உடலில் தங்கி வேலை செய்யயக்கூடிய கால அளவையோ தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அவைகளின் குறிகளை அறிவதே போதுமென்று நினைக்கும் சமயங்களில் அம்மருந்தைச் தொடர்ச்சியாய்ப் பல நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் அதிகரித்த அளவில் கொடுத்து வருவதே நலம். இவ்வழிப்படி முன் பின் தெரியாத, பலமற்ற மருந்துகளின் குறிகளையும் வெளிப்படுத்தலாம். உணர்ச்சிகளை நுட்பமாய் அறியும் உடல்வாகு உள்ளவர்களிடம் இச்சோதனையை செய்து வருவது மிகச் சிறந்தது.

133. மருந்தை உட்கொண்ட பிறகு ஏதோ ஒரு உணர்ச்சி அதாவது நோய்க்குறி தோன்றுவதாக வைத்துக்கொள்வோம் அக்குறிகளின் உண்மையான தன்மையைத் தெரிந்து கொள்ள சோதனையாளர் அச்சமயத்தில் தன் இருக்கையைப் பலவிதமாய்மாற்றி,அதாவது தாக்கப்பட்டுள்ள பகுதியை அசைத்தல், அறையினுள் அல்லது வீட்டுக்கு வெளியே நடமாடுதல்,நின்று கொள்ளல், உட்காருதல், கீழே படுத்துக்கொள்ளல் முதலிய பல செய்கைகளைச் செய்து அவைகளில் எதனால் நோய்க்குறி அதிகமாகிறது, குறைகிறது அல்லது மறைகிறது, எந்த விதமாய் உடல் இருந்தபோது உணர்ச்சி தோன்றியதோ அந்த விதமாய் உடலை மீண்டும் வைத்தால் அவ்வுணர்ச்சி திரும்பித் தோன்றுகிறதா? உணவு உட்கொள்வது, பானங்களைக் குடிப்பது, பேசுவது, இருமுவது, தும்முவது முதலிய பல உடல் வேலைகளில் எதனாலாவது உணர்ச்சியில் மாறுதல் உண்டாகிறதா? ஆகிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும். அத்துடன் பகலில் அல்லது இரவில் எந்தநேரத்தில் அக்குறி வழக்கமாகவும் மிகத் தெளிவாகவும் தோன்றுகிறது என்பதையும் கவனிக்கவேண்டும். இவ்வழியினால் ஒவ்வொரு மனநோய்க்குறிக்கும் உள்ள தனிப்பட்ட சிறப்புத் தன்மை வெளியாகும்.

134. வெளியே உள்ள எல்லா (நோயுண்டாக்கும்) பொருள்களும் விசேஷமாய் எல்லாமருந்துகளும் உயிர் உள்ள உடல்களைத் தாக்கி அதனதன் தன்மைக்கேற்றவாறு ஆரோக்கியத்தைக் குலைத்து நோய்குறிகளை உண்டாக்குகின்றன. ஆனால் ஒரு மருந்துக்கு உரித்தாயுள்ள நோய்குறிகள் யாவும் ஒரே ஒரு மனிதரிடமோ, ஒரே சமயத்திலோ அல்லது ஒரே சோதனையிலோ தோன்றுவது கிடையாது. சில குறிகள் ஒருவருக்கு ஒரே ஒரு சோதனையில் மட்டும் தோன்றுகின்றன. மற்ற குறிகள் இரண்டாவது அல்லது மூன்றாவது சோதனையில் தோன்றுகின்றன. அதன் குறிகளில் சில நான்காவது எட்டாவது அல்லது பத்தாவது சோதனையாளரிடம் ஏற்படலாம். இன்னும் சில இரண்டாவது, ஆறாவது அல்லது ஒன்பதாவது சோதனையாளரிடம் தோன்றியிருக்கலாம். இதைத்தவிர எந்த ஒரு குறியும் எல்லா சோதனையாளர்களுக்கும் ஒரே நேரத்தில் ஏற்படுமென்று சொல்ல முடியாது.

135. ஒரு மருந்தின் சக்தியால் தோன்றக்கூடிய நோயின் முழு விவரங்களையும் அறிந்து கொள்வது எப்படி, பற்பல வித உடல்வாகு உள்ள ஆண:-பெண் இரு பாலருக்கும் பல முறைகள் அம்மருந்தைக் கொடுத்துச் சோதித்தால்தான் அனேகமாக எல்லா விவரங்களும் கிடைக்கும். ஒவ்வொரு மருந்துக்கும் உள்ள நோயுண்டாக்கும் சக்தியைச் சோதித்தாகி விட்டது என்று நாம் திடமாக நம்ப வேண்டுமானால் அம்மருந்தை எவ்வளவு தடவை சோதித்தாலும் பழைய குறிகளைத் தவிர புதிய குறிகள் எதுவும் தோன்றாமல் இருக்க வேண்டும்.

136. ஒரு மருந்தின் சக்தியினால் உண்டாக்கப்படும் நோய்க் குறிகள் யாவும் ஒரே ஒரு மனிதரிடத்திலேயே தோன்றுவதில்லைஸ உடல் அமைப்பிலும் அறிவுத்திறனிலும் மாறுபட்டுள்ள பற்பல மனிதர்களிடத்தில் தான் தோன்றுகின்றன என்பவைகளை மேலே குறிப்பிட்டிருக்கிறோம். ஆயினும் அழிவற்ற, மாற்ற முடியாத இயற்கைச் சட்டப்படி ஒவ்வொரு மனித உடலிலும் அக்குறிகள் அனைத்தையும் உண்டாக்கும் குணம் மருந்துகளுக்கு இருக்கத்தான் செய்கிறது. இந்தக் குணத்தைப் பெற்றிருப்பதால் ஒற்றுமையான குறிகளையுடைய (இயற்கை) நோயுள்ளவர்க்கு மருந்தைக் கொடுத்தால் அம்மருந்தின் குறிகள் யாவும் நோயற்ற உடலில் மிக அரிதாகத் தோன்றும், குறிகள் கூட நோயை நீக்க உதவியளிக்கின்றன. அச்சமயங்களிலே மருந்து மிகச் சிறிய அளவில் இருந்தாலும் ஹோமியோபதிச் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்படுவதால் நோயாளியின் உடலில் இயற்கை நோயின் குறிகளை ஒத்த ஒரு செயற்கை நோயைச் அமைதியான முறையில் உருவாகிறது. அதனால் பழைய நோய் விரைவிலும் நிரந்தாமாகவும் நீக்கப்படுகிறது.

137. சோதனையைச் சுலபமாய் நடத்த நாம் தேர்ந்தெடுக்கும் சோதனையாளர் உண்மையை மதிப்பவராகவும் எல்லா விஷயங்களிலும் மிதமாய் இருப்பவராகவும் உணர்ச்சிகளை உணரக் கூடியவராகவும் அதாவதது தன்னுடலில் உண்டாகும் மிகச் சிறிய உணர்ச்சியைக் கூடக் கிரகித்தறியும் வல்லமையுள்ளவராகவும் இருக்கவேண்டும். இத்தகைய சோதனையாளருக்கு மருந்தை மிகவும் மிதமான அளவுகளில் கொடுத்தால் மருந்தின் வேலை மிகத் தெளிவாய்த் தென்படும். அதாவது இரண்டாம் வேலையின் குறிகளோ,உயிர்ப்புச் சக்தியின் எதிர்ப்பினால் ஏற்படும் குறிகளோ அதனுடன் கலக்காமல் அவசியமாய் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய குறிகள் மட்டும் உண்டாகும். ஆனால் மித மீறிய அளவுகளிலே மருந்தைக் கொடுத்துச் சோதனைசெய்தால் இரண்டாம் வேலைக் குறிகள் பல தோன்றுவதுடன் முதல் வேலைக்குறிகளும் மிக வேகமாகவும்; கடுமையாகவும் ஏற்படுவதால் குழப்பம் உண்டாகிக்குறிகளைச் சரிவரக் கவனிக்க முடியாமல் போகும் இவைகளைத் தவிர அதிக அளவில் மருந்துகளைக் கொடுத்தால் உயிருக்கு ஆபத்தும் நேரலாம். பிறர் உயிரையும் தன்னுயிர் போல கருதுபவர் இந்த தவறைச் செய்ய மாட்டார்.

138. மருந்து உடலில் வேலை செய்யும் காலத்தில் சோதனையாளருக்கு எற்படும் எல்லா உபாதைகளும் ஆரோக்கிய நிலைமையிலிருந்து மாறுபட்ட குறிகளும் மருந்தினால் தான் உண்டாக்கப்படுகின்றன. மருந்தை உட்கொள்வதற்குப் பல காலம் முன்னதாக இயற்கையான முறையில் சோதனையாளருக்கு அதைப்போன்ற நோய்க் குறிகள் தோன்றிய குறிகளை மருந்தை உட்கொண்ட பிறகும் தோன்றுமானால் அக்குறிகள் ஏற்படுவதற்குச் சாதமகமான உடல்வாகு சோதனையாளருக்கு இருக்கிறது என்றே நினைக்கவேண்டும். இவ்விதச் சந்தர்ப்பத்தில் அக்குறிகள் மருந்தின் விளைவேயாகும். உட்கொள்ளப்பட்ட மருந்து உடலெங்கும் பரவி ஆரோக்கிய நிலைமையில் மாறுதலை ஏற்படுத்தும் சமயத்தில் நோய்க்குறிகள் தாமாகவே தோன்றுவதற்கு இடமில்லை. அவை மருந்தின் விளைவேயாகும்.

139. தன் உடலிலேயே மருந்துச் சோதனையை நடத்த முடியாத போது வைத்தியர் வேறு ஒருவரிடத்தில் சோதனையை நடத்தலாம். சோதனையாளர் மருந்தை உட்கொண்டதினால் தன்னுடலில் தோன்றும் உணர்ச்சிகள். உபாதைகள் ஆரோக்கிய நிலைமையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவைகளையும் அப்போதைய நேரத்தையும் அவ்வப்போது குறித்துக் கொண்டு வரவேண்டும். அத்துடன் மருந்து சாப்பிட்டு எவ்வளவு நேரம் கழிந்த பிறகு ஒவ்வொரு குறியும் தோன்றியது. எவ்வளவு நேரம் நீடித்திருந்தது. ஆகிய விவரங்களையும், குறித்துக் கொள்ளவேண்டும். சோதனை முடிந்த உடனே வைத்தியர் சோதனையாளரை தன் எதிரில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு நோய்க் குறியைப் பற்றியும் விவரமாய்க் கேட்டறிந்து முக்கிய விஷயங்களை எழுதிக்கொள்ளவேண்டும். சோதனை பல நாட்களுக்கு நடத்தப்படும் போது ஒவ்வொரு நாளும் சோதனையாளரை விசாரிக்க வேண்டும். அப்பொழுதுதான் சோதனையாளருக்குத் தன் நோய்க் குறிகளைப் பற்றி நல்ல ஞாபகம் இருக்கும்.

140. தன் நோய்க் குறிகளைச் சோதனையாளரால் எழுத முடியாவிட்டால், ஒவ்வொரு நாளும் தனக்கு ஏற்படும் குறிகளையும் அவை ஏற்பட்ட விதத்தையும் அவர் வைத்தியரிடம் தெரிவிக்க வேண்டும். சோதனையாளர் தானாகவே வைத்தியரிடம் தெரிவித்த விவரங்களை நம்பத்தக்கவையாக மதிக்கப்படவேண்டும் . அனுமானம் செய்யப்பட்ட (அளவிடப்பட்ட) குறிகளையும் உண்டு அல்லது இல்லை என்று விடை வரக்கூடிய கேள்விகளால் கிடைக்கும் குறிகளையும் கட்டாயமாய் விலக்க வேண்டம். இயற்கை நோய்களின் உருவத்தை அறியும் விஷயமாக என்னென்ன எச்சரிக்கைகளை நாம் கையாள வேண்டுமென்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். (சுலோகம் 83? 84? 85) அவ்வெச்சரிக்கைகளையே அச்சமயத்திலும் நாம் கையாள வேண்டும்.

141. நோய் நொடியற்ற உடல் முன்கூட்டியே அபிப்பிராயம் கொள்ளாத உள்ளப்பாங்கு, உணர்ச்சிகளை எளிதில் கிரகித்தறியும் வல்லமை ஆகிய குணங்கள் பொருந்திய வைத்தியர் மேலே சொல்லப்பட்ட விதிகளுக்கிணங்க மருந்துகளைத்தன் உடலில் கொடுத்துச் சோதிப்பதுதான் சிறந்தது-ஆரோக்கிய நிலைமையில் ஒவ்வொரு மருந்தும் ஏற்படுத்தக் கூடிய மாறுதல்கள்,ஆரோக்கியமான உடலில் அது உண்டாக்கக் கூடிய செயற்கை நோய்கள், நோய்க் குறிகள் ஆகியவைகளைத் தெரிந்து கொள்ள இதுவே சிறந்த வழி மருந்துகளால் தன் உடலில் உண்டாகும் மாறுதல்களைத் திட்டமாகவும் தவறு இல்ல்hமலும் அவரால் அறிந்து கொள்ள முடியுமல்லவா?

( * தன் உடலிலேயே மருந்துகளைச் சோதிப்பதால் வைத்தியருக்கு விலை மதிக்க முடியாத வேறு அனுகூலங்கள் ஏற்படுகின்றன. மருந்துகளைச் சோதனை செய்த காலத்தில்தான் அனுபவித்த நோய்க் குறிகளினால் ஆரோக்கிய நிலைமையை மாற்றுவதில் அவைகளுக்கு உள்ள வல்லமையைப் பற்றிக் கடுகளவு சந்தேகத்துக்கும் இடமில்லாமல் போய் விடுகிறது. நோயுண்டாக்கும் சக்திதான் நோய் தீர்க்கும் சக்தியாக மாறுகிறது. என்பது தெரிந்த விஷயம். தன்னைத்தானே ஆராய்ந்து கொள்வதால் தன்னுள் தோன்றும் உணர்ச்சிகள், தன் சிந்தனைகள் சொல்லும் விதம், குணம் ஆகியவையகளை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. (ஆத்ம விசாரனையினால்தான் ஒருவனுக்கு உண்மையான அறிவு தோன்றுகிறது.) அத்துடன் வைத்தியருக்கும் தேவையான கவனிக்கும் திறமை ஏற்படவும் இது வழி செய்கிறது.

மற்றவர்களிடத்தில் நடத்தப்படும் சோதனைகளிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் விவரங்கள் அவ்வளவு சுவாராசியமுள்ளதாய் இருப்பதில்லை. பிறரிடம் சோதனையை நடத்தும்போது சோதனையாளர் தன் உணர்ச்சிகளை மாற்றாமல், மறைக்காமல் உள்ளதை உள்ளபடியே கூறினாரா இல்லையோ என்று கவலைப்பட வேண்டியிருக்கும். சோதனையாளர் தன்னை எந்த சமயத்திலாவது ஏமாற்றி விட்டாரோ என்ற சந்தேகம் இருக்கும். பிறரிடம் மருந்துகளைச் சோதனை செய்து அவைகளின் நோய்க் குறிகளைக் கண்டுபிடித்து உண்மையை அறிந்து கொள்வதில் இவ்வளவு இடையூறுகள் இருக்கின்றன.

இந்த இடையூறுகளை முற்றிலும் நீக்க முடியாது ஆனால் தன் உடலிலேயே மருந்துச் சோதனையை நடத்தினால் எந்த ஒரு இடையூறுக்கும் இடமில்லை மருந்தினால் தன்னுடலில் தோன்றிய உணர்ச்சிகளின் தன்மை அவருக்குத் திட்டவட்டமாய்த் தெரியும் மற்ற மருந்துகளையும் உட்கொண்டு சோதனை செய்ய வேண்டுமென்ற ஆவல் மேன்மேலும் அதிகமாகும். இவ்விதம் தன் உடலிலேயே அடிக்கடி மருந்துச் சோதனைகளை நடத்திக்கொள்வதால் செயற்கை நோய்க் குறிகளைக் கவனித்தறியும் கலையில் அவருக்கு நாளுக்கு நாள் பழக்கம் அதிகமாகிறது.

நோய் தீர்க்கும் மருந்துகளின் உண்மையான மதிப்பையும் உபயோகத்தையும் இச்சோதனைகளில் வைத்தியரின் ஆர்வம் அளவு கடந்து நிற்கும் மருந்துச் சோதனையினால் உடலில் தோன்றும் நோய்க்குறிகள் உடலுக்குத் தீங்கிழைக்குமோ என்ற கவலையே வேண்டாம். மருந்துகளால் அடிக்கடி தாக்கபட்ட சோதனையாளரின் உடல் வைரம் பாய்ந்தது போல உறுதியாகி எல்லாவிதச் செயற்கை, இயற்கை நோய்ப் பொருள்களையும், விரட்டியடித்து வெற்றி காண்கிறது என்பது அனுபவ வாயிலாக வெளிப்படுகிறது.)142. ஒரு நோயை நீக்குவதற்காக ஒரு மருந்தை கொடுத்த பிறகு தோன்றும் பல நோய்க்குறிகளில் எவையெவை மருந்தினால் தோன்றியுள்ளன. எவையெவை நோயினால் தோன்றியுள்ளன என்று பிரித்துச் சொல்வது மிகக் கடினம் மிகக் கூர்மையாக கவனிக்கும் திறமை உள்ளவர்களாலேயே அது கண்டுபிடிக்க முடியும்.

143. மருந்துகள் பலவற்றை மேலே உள்ளபடி நோயற்ற உடலில் ஒவ்வென்றாகக்கொடுத்துச் சோதித்து அவைகளால் தோற்றுவிக்கப்படும் எல்லா நோய்க்குறிகளையும் கவனமாவும் உண்மையாகவும் குறித்துவைத்துக்கொண்டோமானால் நம்மிடம் ஒரு உண்மையான மருந்துகளின் இயல்புகளைக் கூறும் நூல் ( மெட்டீரியா மெடிகா-Meteria Mesdica ) இருக்கிறது என்று நம்பலாம். ஒவ்வொரு மருந்துக்கும் உள்ள நோய்குறிகளை பற்றி உண்மையான பொய் கலப்படமற்ற, நம்பத்தகுந்த விவரம் இந்நூலில் அடங்கியிருக்கிறது. அவ்விவரங்களின் துணை கொண்டு ஹோமியோபதி முறைப்படி இயற்கை நோய்களுக்கு ஏற்றதான மருந்துகளை தேர்ந்தெடுக்கலாம்.

144. மேலே குறிப்பிட்ட மெட்டீரியா மெடிகாவில் கற்பனையான விஷயமெதையும் சேர்க்கக் கூடாது சேர்க்கப்படும் ஒவ்வொரு விஷயமும் உண்மையானதாய் இருக்க வேண்டும்.

145. கணக்கற்ற பற்பல மருந்துகளைச் சோதித்து மனிதனின் ஆரோக்கிய நிலைமையை மாற்றுவதில் அவைகளுக்கு உள்ள உண்மையான சக்தியை ஒழுங்காக அறிந்து கொண்டால் தான், பல்லாயிரக்கணக்காய் இருக்கும் இயற்கை நோய்கள் ஒவ்வொன்றிற்கும் அதனுடன் ஒற்றுமை உள்ள செயற்கை நோயை உண்டாக்கும் பொருளை (குணம் செய்யக்கூடிய ஒற்றுமை உள்ள மருந்தைக்) கண்டுபிடிக்க நம்மால் முடியும். செயற்கை நோய்க்குறிகள் உண்மையாய் இருப்பதாலும் மருந்துச் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சக்திவாய்ந்த மருந்துகள் ஒவ்வொன்றும் ஏராளமான நோய்க்குறிகளை வெளிப்படுத்தியதாலும் தகுந்த ஹோமியோபதி மருந்து இல்லையென்று சொல்லக்கூடிய நோய் எதுவுமே இல்லை என்று கூறலாம். மூன்றாவது வினாவுக்கு விடை:-

146. இயற்கை நோய்களை ஹோமியோபதி முறைப்படி நீக்க மருந்துகளின் உண்மையான வேலைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும். மருந்துகளின் உண்மையான வேலைகளை தெரிந்துகொள்ள அவைகளை நோயற்ற மனிதர்களுக்கு கொடுத்து சோதிக்க வேண்டும். அவ்வாறு சோதித்த போது செயற்கை நோய்களை தோற்றுவித்த இக்கருவிகளை (மருந்துகளை) உண்மையான வைத்தியர் எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பது மூன்றாவது வினாவாக அமைந்துள்ளது.

147. மருந்து சோதனை நடத்தப்பட்ட போது தமக்குள்ள செயற்கை நோய்க் குறிகளை வெளியிட்ட பற்பல மருந்துகளில் எந்த மருந்தின் நோய்க்குறிகள் குறிப்பிட்ட ஓர் இயற்கை நோயின் மொத்தக் குறிகளுடன் மிக நெருங்கிய ஒற்றுமையுடன் காணப்படுகின்றனவோ?அம்மருந்தே அவ்வியற்கை நோய்க்கு ஏற்றவாறு ஹோமியோபதி மருந்தாக இருக்கும் இருந்தே தீரவேண்டும் அந்நோய்க்கு அதுவே அமிர்தம்.

148. நீக்கப்படவேண்டிய (இயற்கை) நோயுடன் மிக நெருங்கிய ஒற்றுமையுள்ள (செயற்கை நோய்க்) குறிகளை உண்டாக்கும் இயல்பும் சக்தியும் மருந்துக்கு உள்ளது. அதாவது ஒற்றுமையுள்ள செயற்கை நோயை உண்டாக்குகிறது என்ற காரணத்தினால்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மருந்து தகுந்ததோர் அளவில் கொடுக்கப்பட்டால் நோயாளியின் உயிர்ப்புச்சக்தியினுள்ளே நுட்பமாக நுழைந்து இயற்கை நோயினால் தாக்கப்பட்டுள்ள அதே உடல் உறுப்புகளையும் பகுதிகளையும் தாக்கி அவ்விடங்களில் தன்னுடைய செயற்கை நோயை புகுத்துகிறது. அதுவரை உடலை பிடித்திருந்த இயற்கை நோயைவிட அதிகச்சக்தியும் ஒற்றுமையும் வாய்ந்த செயற்கை நோய் தோன்றியவுடன் உயிர்ப்பு சக்தி துள்ளியெழுந்து முன்பிருந்த இயற்கை நோயிலிருந்து விடுதலை பெறுகிறது. செயற்கை நோயின் சக்தி அதிகமாய் இருந்தபோதிலும் நாம் உபயோகித்த மருந்தின் அளவு மிகக் குறைவாய் இருப்பதால் அது உயிர்ப்பு சக்தியினால் சீக்கிரமே வெல்லப்படுகிறது. இதனால் உடலிலிருந்து பழைய,புதிய நோய்கள் இரண்டும் நீங்க நீடித்த குணமும் ஆரோக்கியமும் தோன்றுகின்றன.

149. இவ்வாறு தகுந்த ஹோமியோபதி மருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சரியாக உபயோகிக்கப்பட்டால் என்ன நேருகிறது. கெடுதலான குறிகளுடனும் பலவிதமான உபாதைகளுடனும் காணப்பட்டட நோய் சமீபத்தில் தோன்றியதாக இருந்தாலும், ஒருசில மணி நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது நாட்பட்டதாய் இருந்தாலும் சில நாட்களிலும் மாயமாய் மறைந்து போகிறது. செயற்கை நோய்க்குறிகள் காணப்படுவதில்லை மிகவும் நாட்பட்ட நோய்கள் (விசேஷமாகச் சிக்கலாகிவிட்ட நோய்கள்) நீங்குவதற்கு இன்னும் சிறிது காலம் அதிகமாகத்தான் ஆகும். அலோபதி முறைப்படி சிகிச்சை செய்யப்பட்ட சமயங்களில் இயற்கை நோயுடன் அலோபதி மருந்துகளின் விளைவுகளாகிய செயற்கை நோயும் ஒன்று சேர்ந்து நோயாளியின் உடல் பாழாகி விடுவதால் நோய் நீங்கப் பல காலமாகும்.

150. ஒன்று அல்லது பலம் குறைந்த நோய்க்குறிகள் சிறிது காலமாகத்தான் இருக்கின்றன. என்று சொல்லிக்கொண்டு வரும் நோயாளிக்கு மருந்து தேவை என்று நினைக்கக்கூடிய நோய் இருப்பதாக வைத்தியர் கருதக்கூடாது நோயாளியின் உணவிலும் பழக்க வழக்கங்களிலும் சிறிது மாறுதல் செய்தாலே அக்கோளாறுகள் குணமாகிவிடும்.

151. ஆனால் கடுமையான உபத்திரங்கள் சில இருப்பதாக நோயாளி கூறுவாரேயானால் வைத்தியர் அவரைச் சோதிக்கவேண்டும். அவ்வாறு சோதித்தால் நோயாளி கூறியதைத் தவிர வேறு பல நோய்க் குறிகளும் இருப்பது தெரியவரும். எல்லா குறிகளையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால்தான், நோயின் முழு வடிவம் தெரியும்.

152. திடீர் வகை நோய் எவ்வளவுக்கெவ்வளவு கடுமையாய் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதன் குறிகள் பலமாகவும் தெளிவாகவும் இருக்கின்றன. அதைப்போலவே போதிய அளவு எண்ணிக்கையுள்ள மருந்துகளின் வேலைகளைப்பற்றி நாம் தெரிந்துகொண்டிருந்தால் நோய்க்கு ஏற்றதான மருந்தைத் தவறின்றித் தேர்ந்தெடுக்க முடியும். பல்வேறு மருந்துகளின் குறிப் பட்டியல்களிலிருந்து இயற்கை நோயின் மொத்தக் குறிகளையும் பெரும்பாலும் ஒத்துள்ள செயற்கை நோயை தோற்றுவித்த மருந்து எது என்று தேர்ந்தெடுப்பது கஷ்டமாய் இருக்காது.

153. ஏற்ற ஹோமியோபதி மருந்தை தேடுகிற அதாவது நீக்கப்படவேண்டிய இயற்கை நோயுடன் ஒற்றுமையுள்ள செயற்கை நோயைத் தோற்றுவித்த மருந்ததை கண்டு பிடிப்பதற்காக, இயற்கை நோயின் மொத்தக் குறிகளுடன் நமக்குத் தெரிந்த மருந்துகளின் குறிப்பட்டியல்களை ஒப்பிட்டு பார்க்கும் இவ்வேலையில், மிகத் தெளிவாய், தனிப்பட்டதாய், அபூர்வமாகவும், வினோதமாகவும் உள்ளதாய் (விசேஷத் தன்மை) இருக்கும் நோய்க்குறிகள் முக்கியமானதாக கருதப்படுகின்றனங கருதப்படவும் வேண்டும் ஏனெனில் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தின் குறிப்பட்டியலில் காணப்படும் விசேஷக்குறிகளுடன் நோயின் விசேஷக் குறிகள் ஒற்றுமையாய் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அம்மருந்து அந்நோயை நீக்க மிகவும் ஏற்றதாகும். பசி இல்லாமை,தலைவலி,பலவீனம், நல்ல தூக்கம் இல்லாமை,இனம் கூறமுடியாத வேதனை, இவைபோன்ற பொதுவான திட்டமாய் கூறமுடியாத குறிகளை பற்றி நாம் கவனிக்கவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் பொதுவான நோய்க்குறிகள் எல்லா நோய்களிலும் எல்லா மருந்துகளிலும் கூட காணப்படுகின்றன.

154. மிகமிகத் தகுந்தது என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தின் குறிப்பட்டியலில் நீக்கப்பட வேண்டிய நோயின் வினோதமான அபூர்வமான தனிப்பட்டதான (விசேஷக்) குறிகள் காணப்பட்டால் நோய்க் குறிகளுடன் அதிக அளவில் ஒற்றுமையுள்ளதாகவும் இருந்தால் அந்நோய்க்கு அம் மருந்தே ஹோமியோபதி முறைப்படி மிக மிக ஏற்றது. அம்மருந்தைக்கொடுக்க முதல் வேலையிலேயே அதிகமான உபத்திரவங்கள் எதுவும் ஏற்படாமல் நோய் (அதிக நாட்படாததாய் இருந்தால்) நீங்கும்.

155. அதிகமான உபத்திரவங்கள் எதுவும் இல்லாமல் என்று நான் எழுதியிறுப்பதன் காரணத்தை இதோ குறிப்பிடுகிறேன் மிக ஏற்றது என்று தேர்ந்தடுத்து கொடுக்கப்படும் மருந்தின் பல குறிகளில் நோய்க்குறிகளுடன் ஒற்றுமையுள்ள சில குறிகள் மட்டும் அதைவிட பலவீனமாயுள்ள நோய்க்குறிகளைப்போக்கடித்து உடலில் அந்நோய்குறிகள் குடிகொண்டிராத இடங்களை பிடித்துக்கொள்கின்றன. மருந்தின் மற்ற குறிகளுக்கும் நோய்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையாதலால் அவைகளால் ஒரு பயனும் விளைவதில்லை. ஹோமியோபதி முறைப்படி மிகவும் குறைந்த அளவில் மருந்தை உபயோகிக்கப்படுவதால் மணிக்கு மணி குணமடைந்து வரும் நோயாளி நோயுடன் சம்பந்தமில்லாத மருந்துக்குறிகளினால் பாதிக்கப்படுவது கிடையாது.

156. எவ்வளவு நன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் நோயாளிக்கு உணர்ச்சிகளை நுட்பமாய் உணரும் உடல்வாகு இருந்து மருந்தின் அளவும் போதிய அளவுக்கு நுண்ணியதாய் இல்லாமல் இருந்தால்?அம்மருந்து உடலில் தங்கி வேலை செய்யும் காலத்தில் சிறிதளவாவது வேதனையோ அல்லது புதியதான நோய்க்குறிகளோ தோன்றாமல் இருப்பதில்லை. எந்த ஹோமியோபதி மருந்தும் இதற்கு விலக்கில்லை. மருந்தும், நோயும் எல்லாக் குறிகளிலும் ஒற்றுமையாய் இருப்பது அரிதினும் அரிது. ஆயினும் (சாதாரணமான சந்தர்ப்பங்களில்) முக்கியத்துவம் அற்ற இவ்வித்தியாசங்கள் உயிர்ப்புச் சக்தியினால் புறக்கணிக்கப்படுகின்றன. அளவு மீறிய உணர்ச்சி உள்ளவர்களைத் தவிர மற்ற நோயாளிகளிடம் அவைகளின் விளைவைக் காண முடியாது மாறுபாடான குனங்களை உடைய கலவை மருந்துகளை உட்கொள்ளுவது தவறான பழக்க வழக்கங்கள், கோபம் வருத்தம் ஆகிய மன உணர்ச்சிகளுக்கு வசப்படுதல் ஆகியவை எதுவும் குறிக்கிடாவிட்டால் ஆரோக்கிய நிலைமை படிப்படியாய்த்திரும்பி முழு குணமும் ஏற்படுகிறது.

157. ஹோமியோபதி முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் மருந்து நோய்க்கு ஏற்றதாகவும் குறைந்த அளவிலும் இருப்பதால் ஒற்றுமையான குறிகளை உடைய நோயை மிருதுவாக நீக்கி அழித்தும் விடுகிறது. நோய்க்குறிகளுடன் ஒற்றுமையில்லாத அதன் மற்ற குறிகளை அதாவது புதிய கெடுதாலான கோளாறுகளைத் தோற்றிவிப்பதில்லை. இது உண்மையே ஆயினும் மருந்தை உட்கொண்டதிலிருந்து சுமார் ஒரு மணி அல்லது சில மணி நேரங்கள் வரை நோய்க்குறிகள் சிறிது அதிகரித்தே காணப்படுகின்றன. கொடுக்கப்படும் மருந்தின் அளவு மிக அதிகமாய் இருந்தால் இப்புதிய குறிகள் பல மணி நேரங்களுக்கு நீடித்திருக்கலாம். அவை இயற்கை நோய்க்குறிகளைப்போலவே தோன்றுவதால் நோயாளிக்கு தன்னுடைய நோய்தான் அதிகமாகியிருக்கிறதோ என்று நினைக்கும்படி இருக்கும். ஆனால் உண்மையில் அவை இயற்கை நோயைவிடச்சிறிது அதிக வலிமை வாய்ந்த மருந்தினால் ஏற்படும் நோய்க்குறிகளே.

158. ஹோமியோபதி முறைப்படி கொடுக்கப்டும் மருந்தினால் சில மணி நேரங்களில் நோய் அதிகமாவது நியாயமாக ஏற்படக்கூடியதேயாகும். (இவ்விதம் நோய் அதிகமானால் முதல் வேளை மருந்தினாலேயே நோய் முக்கால் பாகம் குறைந்து விட்டது என்று முன்கூட்டியே தீர்மானம் செய்துவிடலாம்). ஏனெனில் இயற்கை நோயை முறியடித்து அழிக்க வேண்டுமானால் மருந்து அவ்வியற்கை நோயைவிடப் பலம் வாய்ந்ததாகத்தான் இருக்கவேண்டும். பலமுள்ள நோய் பலவீனமான நோயை அழித்து விடுவதை இதற்கு உதாரணமாய்க் கூறலாம்.

159. கொடுக்கப்படும் ஹோமியோபதி மருந்தின் அளவு குறையக் குறைய மருந்து கொடுத்தப்பின் சிறிது நேரத்திற்கு காணப்படும் நோய் அதிகரிப்பின் காலமும் அளவும் குறைவாய் இருக்கும்.

160. ஆயினும் ஹோமியோபதி மருந்தின் அளவை நாம் எவ்வளவு தூரம் குறைத்தாலும் இயற்கை நோயை நீக்க முடியாத அளவுக்கு அதன் அளவை குறைக்க முடியாது அதாவது அளவை மிக மிகக் குறைந்தாலும் ஹோமியோபதி மருந்து இயற்கை நோயை நிச்சயமாய் அழித்துவிடும். இதனால்தான் ஏற்றதான ஹோமியோபதி மருந்தை உட்கொண்டவுடன் சிறிது நேரத்திற்கு நோய் அதிகமாய் காணப்படுகிறது.

161. மருந்து கொடுத்தபின் சில மணி நேரங்களுக்கு மட்டும் நோய் அதிகரித்துக் காணப்படுகிறது என்று நான் குறிப்பிடுவது அதிக நாட்படாத திடீர் வகை நோய்களில் மட்டும்தான். பலகாலமாய் நீடித்திருக்கும் நோயில் அதிகக் காலம் உடலில் தங்கி வேலை செய்யும் மருந்தை உபயோகிக்கும் போது அம்மருந்து பல நாட்கள் உடலினுள் தங்கியிருப்பதால் சில சமயங்களில் ஆறு, எட்டு அல்லது பத்து நாட்களுக்குக்கூட நோய் அதிகரித்துக் காணப்படலாம். அதாவது ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்களுக்கு நோய் அதிகரிப்பதும் இடை நேரங்களில் குறைவதுமாக இருந்து முடிவில் முழு குணமும் தோன்றும்.

162. ஒவ்வொன்றுக்கும் உரியதான உண்மையான குணங்கள் என்னென்ன வென்று அறியப்பட்ட மருந்துகளின் எண்ணிக்கை அதிகமாய் இல்லாபோது, சிகிச்சைக்கு வந்துள்ள நோயின் பல குறிகளில் ஒரு சில குறிகளே மிகச்சரியானது என்று தேர்ந்தெடுக்கப்படும் மருந்தில் காணப்படும். ஆயினும் அதைவிடத் தகுதி வாய்ந்த வேறு மருந்து இல்லாததால் அதை உபயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

163. இவ்விதமான சமயத்தில் கொடுக்கபடும் மருந்தினால் நோய் முழுவதுமோ அல்லது தொந்தரவு இல்லாமலே குணமாகுமென்று நாம் எதிர்பார்க்க முடியாது என்பது உண்மையே. ஏனெனில் அம்மருந்தை கொடுத்தப்பின்னர் நோயில் அதற்கு முன் காணப்படாத முழுத் தகுதியும் பெற்றிராத மருந்தினால் உண்டாக்கப்பட்ட அதிகப்படியான குறிகள் தோன்றுகின்றன ஆயினும் நோயின் ஒரு பகுதி அதாவது மருந்தின் குறிகளோடு ஒற்றுமை பெற்று இருக்கும் நோய்க்குறிகள் குணமாவது இதனால் தடைபடுவதில்லை அதிகப்படியான குறிகள் தோன்றாமல் குணம் ஏற்படுவதில்லை என்பதுதான் விஷயம். இருந்த போதிலும் கொடுக்கப்படும் மருந்தின் அளவு கூடுமான வரை குறைவாக இருந்தால் அதிகப்படியான குறிகள் கடுமையாய் இருப்பதில்லை.

164. மிகவும் தகுதி வாய்ந்தது என்று தேர்ந்தெடுக்கப்படும் மருந்தின் செயற்கை நோய்க்குறிகளில் ஒரு சிலவே இயற்கை நோயுடன் ஒற்றுமையாய் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அச்சமயத்தில் அம்மருந்தினால் குணம் ஏற்படுமா என்று சந்தேகப்படவேண்டியதில்லை ஒற்றுமையாயுள்ள குறிகள் நோயின் அபூர்வமான தனிப்பட்ட விசேஷக் குறிகளைப்போல் இருப்பதே போதும். அவ்வாறு இருந்தால் வேறு எவ்விதக்கோளாறும் உண்டாகாமல் குணம் தோன்றும்.

165. மருந்துக் குறிகளை மேலே உள்ளபடி நோயின் விசேஷக்குறிகளுடன் ஒற்றுமையாய் இல்லாமல் அதன் பொதுவான சாதாரணக்குறிகளுடன் மட்டுமே (குமட்டல், பலவீனம், தலைவலி முதலியவைகளை உதாரணமாக கூறலாம்) ஒற்றுமையுள்ளதாக இருந்தால் அதைவிடத் தகுதி வாய்ந்த வேறு மருந்தும் தெரியாவிட்டால் நோய் விரைவில் குணமாகும் என்று வைத்தியர் நம்பமுடியாது.

166. ஆனால் இவ்விதமான ஒரு சந்தர்ப்பம் தோன்றுவது மிக அபூர்வம் ஏனெனில் ஏராளமான மருந்துகளின் உண்மை விவரங்கள் நமக்குத் தெரிந்திருக்கின்றன. ஏதோ ஒரு மருந்தினால் துன்பம் நேருமானால் அதைவிடத்தகுதி வாய்ந்த மற்றோர் மருந்தை கொடுக்கும்போது அத்துன்பம் மறைந்துவிடுகிறது.

167. முழுத் தகுதியும் இல்லாத ஒரு ஹோமியோபதி மருந்தை உபயோகிக்கும் காலத்தில் அதிகப்படியான குறிகள் தோன்றினால், நோய் திடீர் வகையைச் சேர்ந்ததாக இருந்தால், மருந்தின் சக்தி முழுவதும் செலவழியும் காலம் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. புதிதாதகத் தோன்றிய குறிகளுடன் நோயின் பழைய குறிகளில் மிச்சம் இருக்கும் குறிகளையும் ஒன்று சேர்த்து மாறுபட்ட நிலைமையை மீண்டும் ஆராயவேண்டும்.

168. அவ்வாறு ஆராய்ந்தால் அந்நிலைமைக்கு முற்றிலும் ஏற்றதான மற்றோர் மருந்தை கண்டுபிடித்துவிடலாம். அம்மருந்தைக்கொடுத்தால் ஒரு வேலையிலேயே நோய் முழுவதும் நீங்கும் அல்லது கணிசமான அளவு நோய் பணிந்து விடும். இரண்டாவதாதக கொடுக்கப்பட்ட மருந்தினாலும் விரும்பிய பலன் விளையாவிட்டால் மறுபடியும் நோயின் அப்போதையக் குறிகளை கவனித்து அதற்கு ஏற்றபடி மருந்தை தேடி கொடுக்கவேண்டும் நோய் முற்றிலும் நீங்கிப் பழைய ஆரோக்கிய நிலைமை திரும்பும் வரை இவ்விதம் நாம் அடிக்கடி நோயின் குறிகளைத் திரும்பத் திரும்ப ஆராய்ச்சி செய்து தேடி தேடி தகுதியான ஹோமியோபதி மருந்துகளை மீண்டும் கொடுத்துவரலாம்.

169,170. முதல் முறையாக ஒரு நோயை சோதனை செய்து ஏற்ற மருந்தை தேர்ந்தெடுக்கும் சமயத்தில் நோயின் மொத்தக்குறிகளை நீக்க அவ்வொரு மருந்து மட்டும் போதாது என்றும் போட்டியிடுவதைப்போல அந்நோய்க்கு இரண்டு மருந்துகள் தகுதி வாய்ந்தவையாக இருக்கின்றன என்றும் தோன்றினால் அவ்விரண்டில் ஏதோ ஒன்றைக் கொடுத்த பிறகு மற்றொரு மருந்தை அடுத்தபடியாக கொடுப்பது சரியான வழியல்ல. முதல் மருந்தினால் நோய்க்குறிகளில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும். ஆதலால் நோயாளியை மீண்டும் பரிட்சை செய்து மாறுபட்ட நிலைமைக்கு ஏற்றதான மருந்தை தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். சிற்சில சமயங்களில் முதல் பரிட்சையில் இரண்டாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தும் தகுதியுள்ளதாக கூட ஆகலாம். ஆனால் எப்படியும் டோட்டல் போட்டுத்தான் பார்க்கணும்.

171. கெட்ட நடவடிக்கை காரணமாக இல்லாமல், சோரா விஷ நோய்க் கூறினால் ஏற்படும் நீடிக்கும் வகை நோய்களில்,நோயை குணம் செய்ய சோராவை அடக்கும் சக்தி வாய்ந்த பல மருந்துகளை ஒன்றன் பின்னொன்றாக கொடுக்க வேண்டி இருக்கிறது. மருந்தை மாற்றும்போது ஒவ்வொரு தடவையும் அதற்கு முன்னதாகக் கொடுக்கப்பட்ட மருந்தின் வேலை தீர்ந்த பிறகு மிச்சம் இருக்கும் குறிகளை ஆதாரமாய் கொண்டே ஏற்ற ஹோமியோபதி மருந்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

172. நோயின் குறிகள் மிகச்சிலவாய் இருக்கும்போது அந்நோயை குணம் செய்வதில் கஷ்டம் தோன்றுகிறது. இக்கஷ்டமான நிலைமையை நாம் மிகக் கவனமாய் பார்க்கவேண்டும். அதை நீக்கினால் யாவற்றினும் சிறந்த நம் ஹோமியோபதிச்சிகிச்சையினால் அந்நோயைக் குணம் செய்துவிடலாம்.

173. இரண்டொரு குறிகள் மட்டுமே உள்ள நோய்களைக் குணம் செய்வது மிகக் கடினம். ஏனெனில் இவ்வொன்றிரண்டு குறிகள் நோயின் மற்ற எல்லா குறிகளையும் மறைத்துவிடுவின்றன. இத்தகைய நோய்களை அரைகுறை நோய்கள் என்றழைக்கலாம்.

174. இவ்வறைகுறை நோய்களின் முக்கியமான குறி ஒன்று உடலின் உட்புறக்கோளாறாகவோ (வருஷக் கணக்காய் இருந்து வரும் தலைவலி பலகாலமாய் நீடித்திருக்கும் வயிற்றுப்போக்கு பல்லாண்டுகளாய் தோன்றிக் கொண்டிருக்கும் இருதய வலி முதலிவைகளை உதாரணமாய் கூறலாம்) அல்லது உடலின் வெளிப்புறக் கோளாறுகளைச் சரும நோய்கள் என்று அழைக்கிறோம்.

175. முதல் வகையைச் சேர்ந்த (உடலின் உட்புற கோளாறு) அரைகுறை நோய்களில் நோயின் முழு வடிவம் வெளிப்படாமல் இருப்பதற்குப் பெரும்பாலும் வைத்தியரின் கவணக்குறைவே காரணமாக இருக்கிறது. வெளியே காணப்படும் குறிகளை அவர் முற்றிலும் கண்டுபிடிக்கத் தவறிவிடுகிறார்.

176,177. ஆயினும் எவ்வளவு கவணமாக பரிட்சை செய்தாலும் ஒன்றிரண்டு கடுமையான கொடுமையான நோய்க் குறிகளைத் தவிர வேறு எவ்விதமான குறிகளும் புலப்படாத சில நோய்களும் இருக்கத்தான் செய்கின்றன. இதைப்போன்ற நோய்களில் வெற்றிகாண்பதற்கு உள்ள வழி யாதெனில் புலப்படும் ஒரு சில குறிகளையே ஆதாரமாய் கொண்டு அவைகளுக்கு மிகமிக ஏற்றதென்று நமக்கு தோன்றும் மருந்தைக் கொடுப்பதுதான்.

178. காணப்படும் இரண்டொரு நோய்க்குறிகள் தெளிவானதாய் தனிப்பட்டதாய், அபூர்வமாய், வினோதமாய், இருந்தால் ஹோமியோபதி முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் மருந்து சிற்சில சமயங்களில் நோயை முற்றிலும் அழிக்கக் கூடியதாக இருப்பதில் சந்தேகம் இல்லை. ஆயினும் தகுதியான மருந்தைத் தேர்ந்தெடுக்கப் போதிய அளவு குறிகள் இல்லாமல் இருந்தால் பல சமயங்களில் நோய் சிறிதளவே குணமடைகிறது.

179,180,181. இத்தகைய ஒரு நோய்க்குக் கூடுமான அளவுக்கு நல்ல முறையில் மருந்து தேர்ந்தெடுக்ப்பட்டிருக்கிறது. ஆயினும் மேலே குறிப்பிட்டபடி அது முற்றிலும் ஹோமியோபதியை அனுசரித்ததாக இல்லை. இக்காரணத்தால் அதனுடன் ஓரளவுக்கே ஒற்றுமையுள்ள நோய்க்குக் கொடுக்கப்படும்போது நோயுடன் ஒற்றுமையற்ற தன் மற்ற குறிகளைத் தோற்றுவிக்கிறது. இப்புதிய குறிகள் நோயின் குறிகளுடன் கலந்துவிடுகின்றன. இக்கலப்புக்குறிகளை மருந்தின் குறிகளாகக் கருதக்கூடாது. அதற்கு முன் அவ்விதமான நோய்க்குறிகள் நோயாளிக்கு எச்சமயத்திலும் ஏற்படவில்லையே என்பதற்காக அவைகளை நோயுடன் சமபந்தமற்றதாக எண்ணக்கூடாது நோயின் குறிகளாகவே மதிக்கவேண்டும். அவ்வாறு மதித்துச் சிகிச்சையைத் தொடர்ந்து நடத்த வேண்டும்.

182. ஒரு சில நோய்க்குறிகளே இருந்ததினால் முற்றிலும் ஏற்றதான மருந்தைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போய்விட்ட இச்சமயத்திலும் அரைகுறையாய் தேர்ந்தெடுக்கப்படும் மருந்து நோயின் முழுக்குறிகளை வெளியே கொண்டுவந்து முற்றிலும் ஏற்றதான மற்றொரு ஹோமியோபதி மருந்தைக் கண்டுபிடிக்க உதவுகிறது.

183,184. முதலில் கொடுக்கப்பட்ட மருந்தினால் ஓரளவு அனுகூலம் (நோயின் மாற்றம்) தோன்றியபிறகு ஒரு சில தொல்லைகள் குணமாகாமல் இருந்தால் (புதியதாக தோன்றியுள்ள குறிகள் ஆபத்தானவையாக இல்லாதபோது) நோயாளியை மீண்டும் ஒரு முறை சோதனை செய்து அச்சமயத்தில் காணப்படும் மாறுபட்ட குறிகளுக்கு ஏற்றதான வேறு ஹோமியோபதி மருந்தொன்றை தேர்ந்தெடுத்துக்கொடுக்கப்பட வேண்டும். முதல் மருந்து கொடுக்கபட்டபோது காணப்பட்டதைவிட இப்போது குறிகள் தெளிவாகவும் அதே எண்ணிக்கையிலும் இருக்கும் இவ்விதம் கொடுக்கப்படும் மருந்தினால் நன்மை விளைவது நின்றவுடன் அச்சமயத்தில் நோய்க்குறிகளை மறுபடி ஆராய்ந்து அதற்கேற்றபடி மற்றோர் மருந்தைத்தேர்ந்தெடுத்துக் கொடுக்கவேண்டும். நோய் முற்றிலும் நீங்கும் வரை இவ்விதம் தொடர்ந்து செய்து வரவேண்டும்.

185. அரைகுறை நோய்களில் முதன்மை வகிப்பது உடலின் மேற்பகுதியான சருமத்தில் உண்டாகும் கோளாறுகளேயாகும். சரும நோய் உடம்பின் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் மட்டுமே நோய் இருப்பதாகவும் மற்ற பகுதிகள் ஆரோக்கியமாய் இருப்பதாகவும் இதுவரை வைத்தியர்கள் கருதி வந்துள்ளனர் இக்கருத்து மிகத் தவறானது மிகமிகக் கொடுமையான விளைவுகளை உண்டாக்கிய சிகிச்சைக்கு இந்த சரும நோயே வழிகாட்டியுள்ளது.

186. அடிதடிபட்டோ, கீழே விழுந்தோ கத்தி முதலிய ஆயுதங்களாலோ உடலின் வெளிப்புறத்தே நேரும் சேதங்களால் தோன்றும் சருமக்கோளாறுகளை வெளிப்புற நோய் என்று சொல்லலாம் ஆயினும் வெளிக்காரணணு;களால் சருமத்தில் ஏற்படும் சேதம் அதிகமாய் இருந்தால் உடம்பு முழுவதும் அக்கோளாரில் பங்கு கொள்கிறது. சுரம் முதலிய அறிகுறிகள் தோன்றுகின்றன. இச்சமயத்தில் அக்கோளாறுக்கு அறுவை சிகிச்சை தேவை என்றாலும் அது ஓரளவிற்குத்தான் அதாவது உயிர்ப்புச்சக்தியின் மூலம் ஏற்படவேண்டிய நன்மைக்குக் குறுக்காக நிற்கும் தன்மைகளை நீக்குவதற்கே அறுவை சிகிச்சை அனுசரிக்கப்படவேண்டும்.

நழுவிப்போன எலும்பின் மூட்டுகளைப் பொருத்திவைத்தல், பிளந்துபோன சருமத்தின் இருஉதடுகளும் ஒட்டிக்கொள்ளும்படித் துணியினால் கட்டி விடுதல், உடலின் உட்புறத்தே ஊடுருவிச் சென்று விட்ட வேற்றுப்பொருள்களை வெளியே எடுத்துவிடுதல், உடலின் சந்து பொந்துகளில் நீர்,பொருள் தேங்கித் துன்பத்தை உண்டாக்கும்போது அங்கே பொத்துவிட்டு நீரைவடியச் செய்தல், முறிந்துபோன எலும்பைச் சேர்த்துப் பொருத்தி வைத்துக்கட்டுதல் முதலியவைகளை உதாரணமாய் கூறலாம். விபத்துக்களால் உடல் முழுவதும் தாக்கப்படாமல் இருப்பது மிக அபூர்வம்தான் கடுமையான அடிதடிகளால் கடுமையான சுரம் தோன்றும்போது அச்சுரத்தையும் மற்றுமுள்ள எல்லா உடல் வேதனைகளையும் உள்ளுக்கு மருந்து கொடுத்தே நீக்கவேண்டும். நெருப்புச் சுடுதல் கொதிக்கும் தண்ணீர் முதலிவை பட்டு வெந்துபோகுதல், ஆகிய காரணங்களால் உண்டாகும் வலியை ஹோமியோபதி முறைப்படியே அடக்கவேண்டும். இது போன்ற சமயங்களில் ஹோமியோபதி வைத்தியரும் ஹோமியோபதி மருந்துகளும் நிச்சயமாகத் தேவை.

187. எவ்விதமான விபத்தும் காரணமாய் இல்லாமல் அல்லது மிக அல்பமான ஏதோ ஒரு காரணத்தினால் உடலின் வெளிப்புறத்தே தோன்றும் சருமக் கோளாறுகளுக்கு ஆதாரம் முற்றிலும் வேறாக இருக்கிறது. உடலின் உட்புறத்தே உள்ள ஏதோ ஒரு கோளாறே அவைகளுக்கு ஆதாரமாய் இருக்கிறது. ஆகவே அச்சரும நோய்களை வெளிப்புற நோய்கள் என்று மதிப்பதும் மேற்பூச்சு மருந்துகளே போதுமென்று முடிவு செய்து அவ்வாறே சிகிச்சை செய்வதும் ஆயிரமாயிரமாண்டுகளாக அலோபதி முறையில் உள்ள மிகுந்த கேட்டை விளைவிக்கும் சிகிச்சை முறைகளில் ஒன்று.

188. இத்தகைய சரும நோய்கள் உடலின் வெளிப்புறத்தின் மட்டுமே இருப்பதாகக் கருதப்பட்டன. ஆகவே அவை வெளிப்புறக் கோளாறுகள் என்று அழைக்கப்பட்டன உடலின் மேல் சரும நோய் உள்ள ஒரு இடத்தைத் தவிர மற்ற எந்த இடத்திலும் நோய் இல்லையென்றும் சரும நோயுள்ள இடத்துக்கும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லையென்றும் (அலோபதியர்கள் ) நினைப்பதாக தெரிகிறது.

189. உடலின் உட்புறத்தே உள்ள ஏதோ ஒரு காரணம், உடலின் ஒத்துழைப்பு ஆகியவை இல்லாமல் எவ்விதமான சருமக் கோளாறும் தோன்றவோ நீடித்திருக்கவோ வளரவோ முடியாது ஆகவே உடலும் நோயுற்றே இருக்கவேண்டும் என்பது சிறிதளவு சிந்தித்தாலே விளங்கும். உயிர்ப்புச்சக்தி, உடலின் மற்ற பகுதிகள் ஆகியவைகளின் ஒத்துழைப்பும் அனுமதியும் இல்லாமல் சருமக்கோளாறு தோன்றியிருக்க முடியாது. உடல் உறுப்புகளின் பல்வேறு உணர்ச்சிகளும் வேலைகளும் ஒன்றோடொன்று மிக நெருக்கமான தொடர்புடையவை. ஆதலால் முழு உடலிலும் கோளாறு இருப்பதாலேயே சருமக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. உடலின் உட்புறத்தை எவ்வித நோயும் தோன்ற முடியாது.

190. சாதாரணமான விபத்துக்களால் அல்லது ஒருவிதக் காரணமும் இல்லாமல்,உடலின் வெளிப்புறத்தே தோன்றும் ஒரு நோய்க்கு உண்மையான சிகிச்சை செய்வது எப்படி? உள்ளுக்கு மருந்துகளை கொடுத்து நோய் முழுவதையும் அழிக்கவேண்டும் அப்போதுதான் சிகிச்சை, நிச்சியமான உண்மையான பயனைத்தரும்.

191. மேலுள்ள விமூயம் முற்றிலும் உண்மை என்பது நமது அனுபவத்தில் சந்தேகத்துக்கு இடம் இல்லாத முறையில் நிருபிக்கப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த ஒவ்வொரு மருந்தும் அதை உட்கொண்ட உடனேயே நோயாளியின் ஆரோக்கிய நிலையில் முக்கியமான மாறுதல்களை எல்லா சமயங்களிலும் ஏற்படுத்துகிறது. முக்கியமாக,வெளிப்புறத்தே நோய் உள்ள பகுதியிலும் மாறுதலை உண்டாக்குகிறது உடலின் வெளிப்புறத்தில் முக்கியமற்ற இடத்திலே நோய் இருந்தாலும்கூட இம்மாற்றம் தவறாமல் ஏற்படுகிறது. அம்மாற்றத்தின் விளைவாக வெளிப்புறத்தே இருந்த நோய் மறைந்து விட்டால் உடல் முழுவதுமே ஆரோக்கிய நிலைமையைத் திரும்பப் பெறுகிறது. மேல் பூச்சு மருந்து எதுவும் தேவையில்லை.

ஆனால் கொடுக்கப்படும் மருந்து நோயின் மொத்தக்குறிகளை ஆதாரமாய் வைத்து ஹோமியோபதி முறைக்கிணங்க முற்றிலும் தகுதியுடையதாக இருக்கவேண்டும்.

192. நோயை ஆராய்ச்சி செய்யும் காலத்தில் வெளிப்புறத்தே தென்படும் நோயின் உண்மையான தன்மையை கவனிப்பதுடன் நோயாளியின் ஆரோக்கிய நிலைமையில் ஏற்பட்டுள்ள எல்லா மாறுதல்களையும் வேதனைகளையும், குறிகளையும்,மருந்து கொடுப்பதற்கு முன்னதாக காணப்பட்ட குறிகளையும் சேர்த்து கவனித்தால் ஏற்றமருந்தை தேர்ந்தெடுக்கும் வேலை வெற்றிகரமாய் முடிகிறது. இவ்வழியினால் நமக்குக்கிடைத்த நோயின் மொத்தக் குறிகளுடன் பெரும்பாலும் ஒற்றுமையுள்ள செயற்கை நோய் ஒன்றைத் தோற்றுவித்த மருந்து எது என்று ஹோமியோபதி முறைக்கிணங்கத் தேர்ந்தெடுத்துக்கொடுப்பது சாத்தியமாகும்.

193. மேலுள்ளபடி தேர்ந்தெடுத்துக்கொடுக்கப்பட்ட மருந்தை உட்கொண்டவுடன் (நோய் சமீபத்தில் தோன்றியதாயின் முதல் வேளை மருந்திலேயே) சருமக் கோளாறும் உடலில் பொதுவாய்க்காணப்பட்ட நோய்க் குறிகளும் ஒரே சமயத்தில் குணமடைகின்றன. சரும நோய் உடலின் புறத்தே இருந்த ஒரு நோயினால்தான் தோன்றியது, என்பதும் அதை தனிப்பட்ட ஒரு நோயாக கருதமுடியாது என்பதும் நோயின் பல குறிகளில் அது மிகத்தெளிவாய் தெரியும் ஒரு குறியே என்பதும் இப்போது புலனாகும்.

194. சரும நோய் சமீபத்தில் தோன்றியதாய் இருந்தாலும் சரி அல்லது பல காலமாய் நீடித்திருந்து வருவதானாலும் சரி, நோய் உள்ள இடத்தின் மேலே எதையும் தடவவோ, தேய்க்கவோ வேண்டியதில்லை அதனால் பயனும் இல்லை நோய்க்கு ஏற்றதாய், உள்ளுக்குச் சாப்பிட்டால் அதை நீக்க வல்லமை உள்ளதாய் இருக்கும் மருந்தைக்கூட மேலே தடவ வேண்டியதில்லை. மருந்தை உள்ளுக்குச் சாப்பிடும்போது கொஹ்சம் மேலேயும் தடவினால் என்ன என்று கேட்கலாம். ஆனால் அவ்விதம் தடவுவதில் எவ்வித நலனும் இல்லை ஏனென்றால் பலமான வெளிப்புற விபத்துகள் எதுவும் காரணமாய் இல்லாமல், மறைமுகமான முறையில் அல்லது உடலின் உட்புற நோயினால் தோன்றும் திடீர்வகை சரும நோய்கள்

(உதாரணம் அக்கி, ஒரு சில உறுப்புகளில் மட்டும் வேக்காடு ஆகியவை) நோயாளியின் உடலிலே உள்ளும், புறமும் தென்படும் குறிகளுக்குத் தக்கபடி ஹோமியோபதி கோட்பாடுகளுக்கு இணங்க தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துகளை உள்ளுக்குக் கொடுத்தால் மிக நிச்சயமாய் குணமடைந்துவிடுகின்றன. பெரும்பாலான சமயங்களில் இம்மருந்துகளைத் தவிர வேறு துணை சிகிச்சை எதுவும் தேவைபடுவதில்லை. ஆனால் சிற்சில சமயங்களில் அந்நோய்கள் அம்மருந்துகளால் முற்றிலும் நீக்கப்படாமல் சரும நோய் அப்படியே இருந்துவருமானால் சோரா எனப்படும். விஷ நோய்க்கூறுதான் அந்நிலைமைக்கு காரணமாய் இருக்கும். இதுவரை உடலின் உட்புறத்தில் உறங்கிக்கிடந்த இவ்விஷ நோய்க்கூறு (சோரா) இப்பொழுது விழித்தெழுந்து தன்னை சரி செய்து கொள்ளவே இவ்வாறு வெளிக்காட்டியுள்ளது என்பதை உணர வேண்டும்.

195. இதுபோல் நிகழ்வது அபூர்வம் என்று சொல்ல முடியாது. அவ்வாறு நிகழ்ந்தால் நோயை முற்றிலும் குணம் செய்ய அதன் கடுமை தணிந்தவுடன் (நீடித்திருக்கும் நோய்களை சிகிச்சை செய்யும் விஷயமாக நான் எழுதியுள்ள புத்தகத்தில் உள்ளபடி) நோயாளியிடம் அச்சமயத்திலும் அதற்கு முன்னதாகவும் காணப்பட்ட நோய்க் குறிகளை ஆதாரமாய் வைத்து ஏற்றதான சோரா விஷத்தை அடக்கக் கூடிய மருந்தை தேர்ந்தெடுத்துக் கொடுக்கவேண்டும். நாட்பட்ட சரும நோய்களில் அவை கெட்ட நடத்தையினால் ஏற்படாதவைகளாய் இருந்தால் சோரா விஷ நோய்க்கூறை அடக்கும் மருந்தொன்றே போதும்.

196. ஹோமியோபதி கோட்பாடுகளுக்கிணங்க நோயின் மொத்த குறிகளுக்கு ஏற்றதான மருந்தை உள்ளுக்குச் சாப்பிடுவதுடன் நோயுள்ள இடத்தின் மேலே தடவியும் வந்தால் நோய் அதிக விரைவில் நீங்கி குணம் ஏற்படும் என்று தோன்றுவது இயல்பு.

197. ஆனால் சோரா விஷ நோய்க்கூறினால் உண்டாக்கப்படும் சரும நோய்களில் மட்டுமின்றி, சிபிலிஸ், சைகோஸிஸ், ஆகிய மற்ற இரு விஷநோய்க்கூறகளால் தோன்றும் சரும நோய்களிலும் இவ்விதம் சிகிச்சையை (மருந்தை நோயுள்ள இடத்தின் மேலே தடவுவது) கையாளக்கூடாது. ஏனென்றால் உடலின் வெளிப்புறக்கோளாறு ஒன்றே (சரும நோய்) ஒரு நோயின் முக்கியமான குறியாக இருக்க, உட்கொள்ளப்படும் மருந்தை அதே சமயத்தில் மேலே தடவவும் உபயோகித்தால் மிகப்பெரியதோர் இடையூறு தோன்றுகிறது. அதாவது அம்மருந்தை சருமக் கோளாறுள்ள இடத்தின் மேலே தடவுவதால் நோயின் முக்கியமான குறி (சருமக் கோளாறு) உள்ளிருக்கும் நோய் குணமாவதற்கு முன்பாகவே குணமாகிவிடுகிறது. இதனால் நோய் முழுவதும் நீங்கிவிட்டது என்று நினைத்து ஏமாந்து போவதற்கு இடமேற்படுகிறது. எப்படி இருந்தாலும் சருமக்கோளாறு மிக முன்னதாக மறைந்துவிடும்போது உட்கொள்ளப்படும் மருந்தினால் உள்ளிருக்கும், நோயும் நீங்கிவிட்டதா இல்லையா என முடிவு செய்வது கஷ்டமாகிவிடும். சில சமயங்களில் முடிவு செய்வது முடியாமல் போய்விடும்.

198. இக் காரணத்தினாலேயே விஷ நோய்க்கூறுகளால் தோன்றும் நீடித்த வகை நோய்களின் சருமக் கோளாறுகளில் உள்ளுக்குச் சாப்பிட்டால் நோயை முற்றிலும் நீக்க வல்லமையுள்ள மருந்தை (உள்ளுக்குச் சாப்பிடாமல்) மேற்புறத்தில் மட்டும் தடவுவது கூடாது. ஏனென்றால் அந்நீடிக்கும் வகை நோயின் வெளிப்புறக்கோளாறு மட்டுமே மறைந்து அரைகுறையான குணமே ஏற்படுகிறது. நோயற்ற நிலைமை முற்றிலும் தோன்றுவதற்கு அவசியமான உட்புறச்சிச்சை விமூயம் குளறுபடியாகிவிடுகிறது. முக்கியமான குறி (சருமக்கோளாறு ) மறைந்து போய் விட்டது அதிக தெளிவு இல்லாத மற்ற குறிகளே இருக்கின்றன. நோயின் உருவைத்தெளிவாகவும் உண்மையாகவும் வெளியிட அவை மட்டும் போதாது.

199. நோய்க்கு ஏற்ற ஹோமியோபதி மருந்து கண்டறிவதற்கு முன்னர் கார மருந்துகளாலோ, கந்தகத்தினாலோ சருமக்கோளாறு கிழித்து அழிக்கப்பட்டுவிட்டால் அந்நோயைக் குணம் செய்வது மிக மிகக் கஷ்டமாகிவிடுகிறது. ( உதாரணம் அதிகமான பேதி மருந்துகளை சாப்பிட்டு, விஷ நச்சு மருந்துகளை சாப்பிட்டும் சரும நோய்களுக்கு பலவகையான கந்தகத்தில் செய்யப்பட்ட களிம்புகளை பூசி மறைக்கப்பட்டிருந்தாலோ, அப்பன்டிசிடிஸ், சைனஸ், டான்சில், கருப்பை கட்டி, மூலம் போன்ற முக்கிய உறுப்புகளை அறுத்து எடுத்தவர்களுக்கு இது போல குறிக்கு தக்க மருந்து கொடுத்தாலும் கூட குணமாவது கஷடம். ஏன் என்றால் சரியான குறிகள் காட்டாது. குறிகள் தப்பு தப்பாக காட்டும். நாம் குறிக்கு தானே மருந்து எடுப்போம். குறியும் தப்பு, தப்பாக போய் மருந்தும் தப்பாக தானே போகும் என்று நூலாசிரியர் கூறுகிறார்.) நோயின் உண்மையான தன்மையை நமக்கு அறிவித்து ஏற்ற மருந்தை தெளிவு படுத்த உதவும் நோயின் வெளிப்புறக்குறி (சருமக்கோளாறு) முற்றிலும் அழிந்து விடுவதாலும் மற்ற குறிகள் அவ்வளவு தெளிவாய் இல்லாததாலுமே இக்கஷடம் ஏற்படுகிறது.

200. சருமக் கோளாறு அழியாமல் இருந்தால் நோயை முற்றிலும் நீக்கத்தக்க ஹோமியோபதி மருந்தை தேர்ந்தெடுத்துச் சிகிச்சை செய்யும் விஷயத்தில் நமக்கு துணைபுரியும் ஏற்ற மருந்தை தேர்ந்தெடுத்து அதை உள்ளுக்குச் சாப்பிடக்கொடுத்துவரும் காலத்தில் சருமக்கோளாறு மறையாமல் இருக்கும் வரை நோய் முழுவதும் நீங்கவில்லை என்றும் மறைந்து விட்டால் நோய் முழுதும் குணமாகிவிட்டது என்றும் நாம் நிச்சயமாய் அறிந்து கொள்ளலாம்.